மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டில் 1,194 தீ விபத்து சம்பவங்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் தெற்கு மாசி வீதியில் நேற்று பிளாஸ்டிக் கடை மற்றும் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.50 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம் அடைந்தது.
இந்த தீயை அணைக்க 7 மணி நேரத்துக்கும் மேலாக போராடிய தீயணைப்புத் துறையினர் 10-க்கும் மேற் பட்ட தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட் டது.
இதைக்கண்ட பொதுமக் கள் அடிக்கடி மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி இதுபோன்று தீ விபத்துகள் நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்து வந்தனர். மேலும் குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே வசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பின்னர் இது போன்ற தீ விபத்துகள் நடைபெறுவதால், மதுரையில் பெரும் அசம்பாவிதம் நடைபெறுமா என்ற அச்சத்தில் ஆன்மீகவாதிகள், பொதுமக்கள் இருக் கின்றனர்.
இந்த சூழ்நிலையில் சமூக ஆர்வலர் நாகேந்திரன் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக மதுரை மாவட்டத் தில் நடைபெற்ற தீ விபத்து குறித்து தகவல் கேட்டு இருந்தார். அதற்காக தீயணைப்புத் துறைகளால் கொடுக்கப்பட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் 1,194 தீ விபத்து சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாகவும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் தீயணைப்புத்துறையினரால் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 85 நிறுவனங்கள் மட்டுமே தீயணைப் புத்துறையினர் மூலம் தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளனர் என்றும், ஆனால் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நடைபெற்ற தீ விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்து உள்ளதாகவும் இந்த தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மதுரை மாநகரில் உள்ள 50 ஆண்டு முதல் நூறு ஆண்டுகள் வரையிலான பழமையான கட்டிடங் களில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களுக்கு 95 சதவீதம் முறையான ஆவணங்கள் இல்லை என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வரும் காலங்களில் பழமையான கட்டிடங்களை உரிய முறையில் தணிக்கை செய்து தீ விபத்துக்களை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோவில் மாநகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.