தேனி மாவட்டத்தில் கம்பத்தில் மிளகாய்பொடி தூவி மூதாட்டியிடம் நகை பறித்த பெண்- பொதுமக்கள் பிடித்து தர்மஅடி
தேனி மாவட்டம் கம்பம் மணிநகரைச் சேர்ந்தவர் முனியாண்டி மனைவி சுருளியம்மாள் (வயது 65). இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து அருகே உள்ள தெருவுக்கு ரைஸ்மில்லில் மாவு அரைக்க சென்று கொண்டு இருந்தார். அவரை பின் தொடர்ந்து ஒரு பெண் வந்தார். அதனை கவனிக்காத சுருளியம்மாள் ரைஸ்மில் நோக்கி சென்று கொண்டு இருந்தபோது திடீரென அவர் மீது மிளகாய் பொடியை தூவி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன தங்க செயினை பறித்துக் கொண்டு ஓட முயன்றார். இதனால் சுருளியம்மாள் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை பிடித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் நகையை பறித்தது மந்தை குளத்தைச் சேர்ந்த முருகன் மனைவி ஜோதி (39) என தெரிய வந்தது. இதனையடுத்து நகையை பறிமுதல் செய்த போலீசார் அதனை சுருளியம்மாளிடம் ஒப்படைத்தனர். பட்ட பகலில் பெண்ணிடம் நகை பறித்து தப்பி ஓட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கம்பம் நகரில் பொதுவாக போதை ஆசாமிகள் மற்றும் வழிப்பறி திருடர்கள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது ஒரு பெண்ணே மூதாட்டியின் மேல் மிளகாய் பொடியை தூவி நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.