தென்காசி அருகே கணவருடன் சேர்த்து வைக்ககோரி சென்னை போலீஸ்காரர் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மனைவி தற்கொலை
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானூர் அருகே உள்ள ராயப்பநாடானூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதர்சன் (வயது29). இவர் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி வ.உ.சி. நகரை சேர்ந்த சின்னதுரை என்பவரது மகள் குமுதா (23) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடை பெற்றுள்ளது.
இந்நிலையில் சுதர்சன் திருமணம் முடிந்து 25 நாட்களில் சென்னை சென்றுள்ளார். அப்போது அவர் தனது மனைவி குமுதாவிடம் சென்னைக்கு சென்று வீடு பார்த்து விட்டு அழைத்துச் செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.
எனினும் குமுதா செல்போனில் பேசியபோது அதனை சுதர்சன் நிராகரித்து அவரிடம் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் சுதர்சன் குமுதாவிடம் உன்னை எனக்கு பிடிக்கவில்லை, நான் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குமுதாவின் குடும்பத்தினர் சுதர்சனின் குடும்பத்தினரிடம் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த பதிலம் இல்லை. இதைத்தொடர்ந்த குமுதா, தனது தாய் வீடான கல்லூரணிக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் சுதர்சன் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இதனையறிந்த குமுதா, நேற்று இரவில் தனது உறவினர்களுடன் சேர்ந்து சுதர்சனின் வீட்டு முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ஆனால் சுதர்சனின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் குமுதா தனது வீட்டிற்கு திரும்பினார்.
இந்நிலையில் குமுதா இன்று காலையில் கல்லூரணி வ.உ.சி நகரில் உள்ள தனது தாய் வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் பிணமான தொங்கினார்.
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடபாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.