பாட்டி வீட்டில் ரூ.47 ஆயிரம் திருடிய சிறுவன்
விருதுநகர் இந்திராநகர் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்த சிறுவன் பள்ளி விடுமுறையை முன்னிட்டு மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியுள்ளான். அப்போது அதே பகுதியை சேர்ந்த 4 பெண்கள் சிறுவனுக்கு திண்பண்டங்கள் வாங்கி கொடுத்து அன்பாக பேசி பழகி வந்துள்ளனர்.
சம்பவத்தன்று 4 பேரும் சிறுவனிடம் பாட்டி வீட்டு பீரோவில் இருந்து பணத்தை திருடு வருமாறு கூறி உள்ளனர். அந்த சிறுவனும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோவை திறந்து ரூ.47 ஆயிரம் ரொக்கத்தை எடுத்து வந்து அந்த பெண்க ளிடம் கொடுத்துள்ளான். பின்னர் அந்த பணத்தை அவர்கள் பங்கு போட்டு கொண்டனர்.
இந்த நிலையில் வீட்டுக்கு வந்த சிறுவனின் தாய் பீரோவில் இருந்த பணம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சிறுவனிடம் கேட்டபோது நடந்த விபரத்தை கூறியுள்ளான். மேலும் பணத்தை எடுத்தது யாரிடமும் கூறக்கூடாது என பெண்கள் மிரட்டிய தாகவும் சிறுவன் அழுதுக் கொண்டே தனது தாயிடம் கூறினான்.
இதையடுத்து சிறுவனின் தாயார் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த அர்ஜூன் மனைவி அன்னி யம்மாள் என்ற அம்முனி (வயது33), செல்லப்பாண்டி மகள் ஜான்சி ராணி என்ற மீனா (21), மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகர் பாலு மகன் சாலமன் ராஜா (24), ஆழ்வார்புரம் முருகன் மகன் கார்த்திக் (26) ஆகிய 4 பேர் சிறுவனை தூண்டி விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.