
கடலூர் அருகே பெயிண்டர் திடீர் சாவு: தனியார் கல்லூரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
நெல்லிக்குப்பம் மோரை மேட்டு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). பெயிண்டர். இவருக்கு காயத்ரி என்கிற மனைவியும், 2 வயது குழந்தையும் உள்ளனர். நேற்று நெல்லிக்குப்பம் அடுத்த குமராபுரம் தனியார் கல்லூரி வளாகத்தில் பெயிண்டிங் பணியில் மணிகண்டன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென்று தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இத்தகவல் அறிந்த மணிகண்டன் மனைவி காயத்ரி, அவரது உறவினர்கள், கவுன்சிலர் முத்தமிழன் உள்ளிட்ட பலர் கல்லூரி வளாகத்தில் திரண்டனர். இத் தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை கைப்பற்றி பிறகு பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இறந்த மணிகண்டன் மனைவி மற்றும் உறவினர்கள் தனியார் கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மணிகண்டன் இறந்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
