
தேனியில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு
2023-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நில ஆர்ஜித வழக்குகள், மோட்டார் வாகன வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்த வேண்டும் என மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு உத்தரவிட்டதன் பேரில் தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
தேனி மாவட்ட முதன்மை நீதியரசர் சஞ்சய்பாபா தலைமையிலும் சிறப்பு மக்கள் நீதிமன்ற சார்பு நீதியரசர் சுந்தரி முன்னிலையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 4 நில ஆர்ஜித வழக்குகளும், 10 மோட்டார் வாகன வழக்குகளும், 5 வங்கி தொடர்பான வழக்கு களும் என மொத்தம் 19 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில் மொத்தம் ரூ.3,37,15,158-க்கான இழப்பீட்டுத் தொகைகளை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்திரவிட்டு வழக்கு தீர்த்து வைக்கப்பட்டது.
இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு வக்கீல் கருணாநிதி மற்றும் பிற வக்கீல்கள், சட்டப்பணிகள் ஆணையக்குழு அலுவலர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
