.:வாட்ஸ் அப்பில் போலீஸ் நெட்வொர்க்.. “தீயா பறக்கணும்”: டிஜிபி முதல் கடைநிலை காவலர் வரை.. பரபர உத்தரவு!
தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளின் நலனுக்காக கடைசியில் உள்ள காவலர் வரை பயன்பெறும் வகையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து செயல்பட தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்களுக்குப் பாதுகாவலர்களாகச் செயல்பட வேண்டியவர்கள் காவல்துறையினர். ஆனால், பல நேரங்களில் காவல்துறை அதிகாரிகளே பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இந்நிலையில் “Tamilnadu police welfare” என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி, கடைசி நிலை காவலர்கள் வரை அனைவரையும் ஒரே நெட்வொர்க்கில் இணைக்கவும், உடனடியாக தகவல்களைச் சென்று சேர்க்கவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “Tamilnadu police welfare என்ற பெயரில் உருவாக்கப்படும் வாட்ஸ் அப் குரூப்பில் டிஜிபி உள்ளிட்ட தலைமை அதிகாரிகள் இருப்பார்கள். சென்னையை பொறுத்தவரையில் இணை ஆணையர் வெல்ஃபேர் தலைமையில் வாட்ஸ் அப் குரூப் அமைத்து அதில் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இணைக்க வேண்டும்.
அதன்பின் துணையான இவர்கள் தலைமையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து அதில் உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். உதவி ஆணையர்கள் தலைமையில் அமைக்கப்படும் வாட்ஸ் அப் குரூப்பில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என கடைசி காவலர்கள் வரை இருக்க வேண்டும்.
மற்ற நகரங்களை பொருத்தவரையில் துணை ஆணையர் தலைமையில் வாட்ஸ் அப் குரூப் அமைக்கப்பட்டு உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். மாவட்ட அளவில் ஏடிஎஸ்பி தலைமையில் வாட்ஸ்அப் குரூப் அமைக்கப்பட்டு அதில் டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இருக்க வேண்டும். மற்ற நகரங்களிலும் மற்றும் மாவட்டங்களிலும் ஆய்வாளர்கள் தலைமையில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் கீழ் கடைசி காவலர்கள் வரை இணைக்கப்பட வேண்டும்.
இவ்வாறாக அமைக்கப்படும் வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து காவல்துறை நலன் சார்ந்து பதிவிடப்படும் பதிவுகள் மூலமாக உடனடியாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் தலைமை அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்களுக்கு பதிவுகள் அனுப்பப்பட வேண்டும்..