
3 ஆண்டுகளாக காலியாக இருக்கும் ஐ.எஸ் இன்ஸ்பெக்டர் பதவி; என்ன சொல்கிறார்கள் உயரதிகாரிகள்?
சேலம், மாநகரக் காவல்துறைக்குக்கீழ் 15-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் இருந்துவருகின்றன. இதில், மகளிர் காவல் நிலையமும் அடக்கம். இந்த நிலையில், ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் பொறுப்பாளராக இன்ஸ்பெக்டர், உதவி ஆணையர் என்று இருந்தாலும், காவல் நிலையங்களில் நடக்கக்கூடிய நேரடி விஷயங்களையும், மறைமுக விஷயங்களையும் மாநகரக் காவல் ஆணையரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது நுண்ணறிவுப் பிரிவு எனும் ஐ.எஸ் `இன்டெலிஜென்ஸ் செக்ஷன்’ தான். இந்தப் பிரிவு மாநகரக் காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் இயங்கிவருகிறது.
இந்த நுண்ணறிவுப் பிரிவை தமிழகமெங்கும் உள்ள மாநகரக் காவல்துறையில் கொண்டு வந்ததற்கான காரணமே, ஒவ்வொரு காவல் நிலையத்திலுமிருந்து வரக்கூடிய தகவல்கள் சரியாக வருவதில்லை. குற்றச் சம்பவங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை, தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பிரிவு கொண்டுவரப்பட்டது.
இதற்கென தனி உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கு கீழ் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஐ.எஸ் என்ற காவலர்கள் மஃப்டியில் இருந்துகொண்டு, தகவல்களைச் சேகரித்து அனுப்புவார்கள். இப்படி அனுப்பும்போது காவல் நிலையத்திலிருந்து ஏதோ சில தகவல்கள் மறைக்கப்பட்டிருந்தாலும், ஐ.எஸ் அளிக்கும் தகவல்களில் காவல் ஆணையருக்குத் தெரிந்துவிடும்.
சொல்லப்போனால் போலீஸார் உடனே இருந்துகொண்டு, அவர்களை உளவுபார்க்கும் வேலைதான் இது. இதற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பது அந்தந்த மாநகரின் காவல் ஆணையாளர்கள்தான். இதில், முக்கியப் பொறுப்புகளான உதவி ஆணையாளர், இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி ஆய்வாளர் பொறுப்புக்கு ஒருவரை நியமிக்க வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட காவல் ஆணையர் பரிந்துரை செய்ய வேண்டும் என்பதுடன், மாநில உளவுத்துறையும் அவர்கள் குறித்த தகவல்களை காவல்துறை மேலிடத்துக்கு அனுப்ப வேண்டும்.
இந்த நிலையில்தான் சேலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாநகர நுண்ணறிவுப் பிரிவில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நிரப்பப்படாமல் இருக்கிறது. இது குறித்து விவரமறிந்த காவல் அதிகாரிகளிடம் பேசியபோது, “சேலம் மாநகர நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் பொறுப்பில் 2018-லிருந்து 2021-ம் ஆண்டு ஜூலை வரை கற்பகம் என்பவர் இருந்தார். அதன் பிறகு இதுவரையிலும் அந்த இடம் நிரப்பப்படாமல் இருக்கிறது. இதற்கிடையில் சம்பந்தப்பட்ட பணியிடத்துக்கு தற்போது ஈரோட்டில் பணியாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி, சேலம் ஆத்தூரில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வரும் ரஜினிகாந்த், பாரதிமோகன், செல்வராசன் ஆகியோர் காய்களை நகர்த்தி முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால், இவர்களில் யாருக்கும் அந்தப் பதவி வழங்கப்படவில்லை. இந்தப் பணியிடத்தை யாருக்காகவோ இன்னும் நிரப்பாமல் வைத்திருக்கின்றனர். இதனால், மாநகரக் காவல்துறையின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது” என்றனர்.
இது தொடர்பாக தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலிடம் பேசியபோது, “மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது என்று நீங்கள் சொல்லித்தான் தெரியவருகிறது. சம்பந்தப்பட்ட காவல் ஆணையர் இந்தப் பணியிடத்தை நிரப்பியிருக்க வேண்டும். இதில் வேறெதுவும் காரணம் இருக்கிறதா என விசாரிக்கிறேன்” என்றார்.
மேலும் தமிழக உளவுத்துறை ஐ.ஜி செந்தில் வேலனிடம் இது தொடர்பாகப் பேசினோம், “இது தொடர்பாக மாநகரக் காவல்துறை பரிந்துரை செய்தது போன்று எனக்கு ஐடியா இல்லை. சம்பந்தப்பட்ட மாநகரக் காவல் ஆணையர்தான் பரிந்துரை செய்ய வேண்டும்” என்றார்.
இது தொடர்பாக சேலம் மாநகரக் காவல் ஆணையர் விஜயகுமாரியிடம் பேசியபோது, “நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு ஒருவரை நியமிக்க வேண்டுமென்றால், அவர்மீது எந்தவித குற்றச்சாட்டும் இருக்கக் கூடாது. அப்படியான நபரை நாங்கள் தேடிவருகிறோம். அதோடு எஸ்.பி.சி.ஐ.டி-யும் ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். அதை வைத்துதான் முடிவெடுக்க முடியும்” என்றார்.
இது குறித்து சேலம் மாநகர எஸ்.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் குமரேசனிடம் பேசியபோது, “நுண்ணறிவுப் பிரிவு பணியிடத்துக்கு நாங்கள் ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. மாநகரக் காவல் ஆணையாளரே நியமித்துக்கொள்ளலாம். எங்களுக்கு எந்தவித பரிந்துரையும் செய்ய வேண்டி காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து தகவல் வரவில்லை” என்றார்.
மாற்றி, மாற்றி கைகாட்டிக் கொள்ளும் அதிகாரிகள், விரைவாக அந்தப் பொறுப்புக்கு ஒருவரை நியமித்து, காவல்துறை மேம்பட வழிவகை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
