
ரவுடியிசம், சட்டத்தை மீறுதல்: இந்த வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் துணை போகக் கூடாது- நீதிபதி நிர்மல்குமார்
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் 46-வது ஆண்டு விழா திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (செப்.8) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், இந்த சமூகத்தில் மூத்த வழக்கறிஞர்கள் ஆலமரம் போன்றவர்கள். ஆலமரத்தில் வந்து அமரும் பறவைகள் பல நல்ல விஷயங்களை தெரிந்து கற்றுக்கொள்ளும். இதேபோலத்தான் மூத்த வழக்கறிஞர்களிடம் பயிற்சி பெறும் இளம் வழக்கறிஞர்கள் இந்த தொழிலில் உள்ள மதி நுட்பங்கள், நேர்மையை கட்டாயம் கற்றும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். வழக்கறிஞர்கள் சங்கத்தில் சிவில், குற்றவியல், மாவட்டம், தாலுகா, பெண் வழக்கறிஞர்கள் சங்கம் என வழக்கறிஞர்களுக்காக பல்வேறு சங்கங்கள் இருக்கலாம். அந்தந்தத்துறை பகுதிகளுக்காக பிரத்யேகமாக அந்தந்த சங்கங்கள் உள்ளன.
ஆனால், வழக்கறிஞர் சமுதாயம் என்றால் ஒன்றுதான் என அனைத்து சங்கங்களுமே ஒற்றுமையுடன் வழக்கறிஞர்களுக்கு தேவைப்படும் கோரிக்கைகளை தனித்தனியாக முன் வைக்காமல், கூட்டாக சேர்ந்து குரல் கொடுக்கும்போது தான் கோரிக்கையின் முக்கியத்துவம் மற்றும் வலிமை பெறும். அப்போது கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேறும், நிறைவேற்றப்படும். எந்த தொழிலிலும் இல்லாத திருப்தி வழக்கறிஞர் தொழிலில் மட்டுமே இருக்கின்றது. வழக்கறிஞர்கள் தங்களிடம் நீதிவேண்டி வருபவர்களுக்கு நேர்மையை சொல்லிக்கொடுங்கள். வழக்கின் உண்மைத் தன்மையை உணருங்கள். வழக்கின் உண்மையை தெளிவாக உணர்ந்தால் மட்டுமே நீங்கள் வழக்கை நேர்மையாக கொண்டு சென்று வாதிட முடியும். கடினமாக நேர்மையாக உழைக்கும் வழக்கறிஞர்கள் மீதுதான் நீதிபதிகளுக்கு மதிப்பும், மரியாதையும் ஏற்படும்.
பார் கவுன்சில் உறுதியாக இருக்கவேண்டும்
அதேநேரம், போலி வழக்கறிஞர்களை கண்டறிந்து அவர்களது பதிவை ரத்து செய்வதை போன்று, விதிகளை மீறும் வழக்கறிஞர்கள் மீது பார்கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல், பொதுச் சொத்துக்களை ஆக்கிரமித்தல், ரவுடியிசம், சட்ட விதிகளை மீறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் துணை நிற்கக்கூடாது. 5% வழக்கறிஞர்கள் தவறு செய்யும்போது மீதமுள்ள 95% வழக்கறிஞர்களுக்கும் அது அவப்பெயரை ஏற்படுத்தும். இளம் வழக்கறிஞர்களை வழிநடத்துவதிலும், தவறு செய்யும் வழக்கறிஞர்களை தண்டிப்பதிலும் பார்கவுன்சில் உறுதியாக இருக்கவேண்டும். நான் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும், முதலில் நானும் ஒரு வழக்கறிஞர்தான். எனவே, எப்போதும், வழக்கறிஞர்களுக்கான உரிமைக்கு துணை நிற்பேன். அதேநேரத்தில் சட்ட விதிகளை மீறுவோர் யாரையும் அனுமதிக்க முடியாது. டிஜிட்டல் மயம், ஆன்-லைன் நடவடிக்கைகளால் வழக்கறிஞர்களுக்கு வருங்காலம் பெரும் சவாலாக இருக்கும். எனவே, வழக்கறிஞர்கள் யாவரும் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக இளம் வழக்கறிஞர்களுக்கு நடுவர் நீதிமன்றங்கள்தான் கற்பதற்கான களமாகும். அத்தகைய நீதிமன்றங்களில் வரும் ஒவ்வொரு மனுக்கள் மற்றும் வழக்குகளையும் கவனமாக ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு பேசுகையில், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும், சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.
