தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது – 25 கிலோ பறிமுதல்
கடையநல்லூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிக அளவில் இருப்பதாக புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தது. அதன்பேரில் கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் தலைமையிலான போலீசார் கடையநல்லூரில் உள்ள தினசரி மார்க்கெட் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் வடக்கு விளை தெருவை சேர்ந்த ராஜூ(வயது 37) என்பவர் வைத்திருந்த கடைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
அதனைத்தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் ராஜூவும், கடையநல்லூர் பேட்டை நத்துகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த நத்தகர் பாதுஷா(47) என்பவரும் கடையநல்லூரில் மொத்தமாக கடைகளுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் பாதுஷா, ராஜூ ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் இருவரிடம் இருந்தும் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 25 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் .