
கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பல்
மதுரை மாவட்டம், மேலூர் முகமதியாபுரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா. இவர் ஒத்தக்கடையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டி ருந்தார்.
மேலூர் 4 வழிச்சாலையில் உள்ள கட்டப்பட்டி பகுதியில் வந்தபோது மற்றொரு மோட்டார் வந்த வாலிபர் ஒருவர் வழிகேட்பதுபோல் பேச்சு கொடுத்தார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென அந்த நபர் ஷேக் அப்துல்லாவை மறித்தார். அப்போது அவரது கூட்டாளிகள் 2 பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். தொடர்ந்து 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டிய அந்த கும்பல் ஷேக் அப்துல்லா விடம் பணம் கேட்டனர். ஆனால் அவர் தர மறுத்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தியால் கையில் வெட்டி செல்போன், பணத்தை பறித்து சென்றது.
இந்த சம்பவம் நடந்த சில மணிநேரத்தில் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த சொக்கம்பட்டியை சேர்ந்த மணிவாசகம் என்பவரிடம் இதே கும்பல் கத்திமுனையில் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது. குற்றவாளிகள் அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள்.
இதுதொடர்பாக 2 பேரும் மேலூர் போலீசில் புகார் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மேலூர் 4 வழிச்சாலையில் இரவு நேரங்களில் தனியாக செல்வோரை குறிவைத்து அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. ஒரு குறிப்பிட்ட கும்பல் நோட்டமிட்டு இதனை செயல்படுத்தி வருகின்றனர். எனவே போலீசார் மேற்கண்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் வழிப்பறி கும்பலை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
