Police Department News

அண்ணா பிறந்தநாள் | காவல்துறையினர் 127 பேருக்கு அண்ணா பதக்கங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அண்ணா பிறந்தநாள் | காவல்துறையினர் 127 பேருக்கு அண்ணா பதக்கங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, தமிழக காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்கள் உள்ளிட்ட 127 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி அவர்கள் திறம்பட செயல் பட்டமைக்காகவும் சாயல்குடி உதவி ஆய்வாளருக்கு, வீரதீர செயலுக்கான முதல்வரின் அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளன்று தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல் துறையில் தலைமைக் காவலர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் மாவட்ட அலுவலர் வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் சிறை கண்காணிப்பாளர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் படைதளபதி வரையிலான 4 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் 2 அலுவலர்கள் துணை இயக்குநர் மற்றும் அறிவியல் அலுவலர் ஆகியோருக்கும், அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் “தமிழக முதல்வரின் அண்ணா பதக்கங்கள்” வழங்கிட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
மேலும், சாயல்குடி காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில், கூட்டுப் பலாத்காரம் மற்றும் கொள்ளை குற்றத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு தலைமறைவான குற்றவாளிகளை 25.03.2022 அன்று கைது செய்யும் பணியில் ஈடுபட்டபோது கே.நவநீத கிருஷ்ணன், உதவி ஆய்வாளர், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு, ராமநாதபுரம் மாவட்டம், எதிரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு இடது தொடையில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த போதும், சற்றும் தளர்வில்லாமல் தனது தைரியச் செயலினால் இரண்டு எதிரிகளையும் கைது செய்ய உதவியாக இருந்துள்ளார். இந்த தாக்குதலில் தலைமைக் காவலர் கருப்பசாமி என்பவரின் உயிரை காப்பாற்ற மிகவும் உதவியாக இருந்துள்ளார். கே.நவநீத கிருஷ்ணன், உதவி ஆய்வாளரின் துணிச்சலையும், செயலையும் பாராட்டி அவருக்கு காவல் துறையின் வீரதீர செயலுக்கான “தமிழக முதல்வரின் அண்ணா பதக்கம்” வழங்கிட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். மேற்கண்ட பதக்கங்கள் தமிழக முதல்வரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.” இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.