
ஒரே நாளில் ரூ.11,000 வரை சம்பாதிக்கலாம் என மோசடி: சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி எச்சரிக்கை
இணையதளத்தில் கருத்துகள், மதிப்புரைகள் வழங்கினால் ஒரே நாளில் ரூ.11 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என விளம் பரப்படுத்தி பண மோசடி நடை பெறுவதாக சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: இன்றைய நவீன காலத்தில் வாழ்வின் ஒரு அங்கமாக இணையதளம் உள்ளது. இதனால், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. அந்தவகையில், ஆன்லைனில் எளிதான வேலை, அதன்மூலம் கணிசமான வருமானம் என்று கவர்ச்சியான விளம்பரங்களுடன், பொதுமக்களை கவர்ந்து, பின்னர் படிப்படியாக அவர்களிடம் இருந்து பணம் பெற்று மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
அதிகமான புகார்கள்: அந்தவகையில் சமீபத்தில் ஒரே மாதிரியான மோசடி புகார்கள் சைபர் குற்றப்பிரிவுக்கு அதிகளவில் வந்துள்ளன. அதாவது, வாட்ஸ்அப் மூலம் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளும் மோசடி நபர்கள்,தங்களை டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் ஹெச்ஆர் என அறிமுகப்படுத்தி கொள்கின்றனர்.
பின்னர், அவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு வணிகங்கள், கூகுள் மேப், உள்ளிட்ட பல்வேறு இணையதள முகவரியில் மதிப்புரைகள், கருத்துகளை வழங்குவது போன்ற பணிகளை வழங்குகிறார்கள். அதன்மூலம், ஒரு நாளைக்கு ரூ.450 முதல் ரூ.11,000 வரை சம்பாதிக்கலாம் என கூறி கவர்ந்திழுக்கிறார்கள்.
முதலீடு செய்ய தூண்டுதல்: முதலில், இந்த பணி முறையானதாகவும், எளிமையாகவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிகிறது. ஆரம்ப பணியை முடித்தவுடன் அவர்களின் பணிக்கான வெகுமதியாக பணம் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தி, பின்னர் டெலிகிராம் குழுவில் அவர்களை இணைத்து, அங்கு பகிரப்படும் இணையதளத்தில் உள்ள வர்த்தக கணக்கில் பண முதலீடு செய்ய தூண்டி, பண மோசடியில் ஈடுபடுகிறார்கள்.
மோசடி செய்பவர்கள், பாதிக்கப்பட்டவர்களை அதிக பணம் செலுத்தும் வரை அவர்களுக்கான வருவாயை நிறுத்தி வைப்பது போன்ற அழுத்தங்களை கொடுக்கிறார்கள். இந்த மோசடி தொடர்பாக கடந்த 6 மாதங்களில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எச்சரிக்கை அவசியம்: எனவே, பொதுமக்கள் வாட்ஸ் அப், டெலிகிராம், முகநூல் மெசஞ்சர் மூலம் பெறும் சலுகைகள், வேலைவாய்ப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற புகார்களுக்கு ‘1930’ என்ற எண்ணிலும்,www.cybercrime.gov.inஎன்ற இணையதளத்திலும் புகாரை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
