கட்டாய காத்திருப்பில் இருந்த IPS அதிகாரிகள் திஷா மிட்டல், தீபா சத்யனுக்கு மீண்டும் போஸ்டிங்!
கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 2 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மீண்டும் பணியிடம் வழங்கி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் மாவட்ட துணை ஆணையராக இருந்த திஷா மிட்டல் கடந்த ஜனவரி மாதம் பதவி உயர்வு பெற்று சென்னை பெருநகர கிழக்கு இணை ஆணையராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அவரை கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் கடந்த மாதம் உத்தரவிட்டார்.
கடந்த மாதம் சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்ற ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் பல ஆயிரங்கள் செலவு செய்து டிக்கெட் வாங்கியும், டிக்கெட் விற்பனையில் குளறுபடியால் கூட்ட நெரிசல் காரணமாக உள்ளே செல்ல முடியாததால் ரசிகர்கள் பலர் கொந்தளித்தனர். இசை நிகழ்ச்சியைக் காண உள்ளே சென்ற ரசிகர்களும், கூட்ட நெரிசலால் குழந்தைகளை தொலைத்து அவதிப்பட்டனர். இதுமட்டுமல்லாமல் சில பெண்களுக்கு பாலியல் சீண்டல் நடந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இசை நிகழ்ச்சி நடந்த மைதானத்திற்கு வெளியே போக்குவரத்து நெரிசல் நிரம்பி வழிந்தது. போக்குவரத்தை நெறிப்படுத்துவதில் போலீசார் சரிவரச் செயல்படவில்லை என்றும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சென்னை கிழக்கு துணை ஆணையர் திஷா மிட்டல் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதேபோல, பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யனும் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இதுமட்டுமல்லாமல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஸ்தம்பித்தது. இதன் காரணமாக அலுவலகம் முடிந்து வீட்டுக்கு செல்வோரும் மருத்துவமனைகளுக்கு சென்றோரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அண்ணாமலை போராட்டத்தை சரியாக கையாளவில்லை என்பதாலும் திஷா மிட்டலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளான திஷா மிட்டல், தீபா சத்யன் ஆகிய இருவருக்கும் தற்போது போஸ்டிங் போடப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாடு முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், பணி நியமனம் செய்தும் தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த முன்னாள் சென்னை கிழக்கு இணை ஆணையர் திஷா மிட்டல், டெக்னிக்கல் சர்வீசஸ் டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த தீபா சத்யன், சென்னை காவல்துறை தலைமையகத்தில் ஏ.ஐ.ஜி-யாக மாற்றப்பட்டுள்ளார்.