கடையத்தில் சட்டவிரோதமாக கரம்பை மண் கடத்தல்- 3 பேர் கைது-3 டிராக்டர்கள் பறிமுதல்
நெல்லை:
கடையத்தில் குளங்களில் இருந்து கரம்பை மண் எடுத்து செல்வதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சிலர் சட்டவிரோதமாக செங்கல் சூளைகளுக்கு அவற்றை எடுத்து சென்று விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது.
இதையடுத்து கடையம் சப்-இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில ரோந்து சென்றனர். அப்போது கரம்பை மண் ஏற்றி வந்த 3 டிராக்டர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அவர்கள் உரிய அனுமதி சீட்டு இல்லாமலும், விவசாயத்திற்காக அல்லாமல் விற்பனைக்கு செங்கல் சூளைக்கு கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து 3 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை ஓட்டி வந்த டிரைவர்களான கடையம் திரவியம் நகரை சேர்ந்த மாரியப்பன்(வயது 45), அழகப்பபுரம் ராஜா(20), மீனாட்சிபுரம் ரவி(37) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் தப்பியோடிய கடையம் திரவியம் நகரை சேர்ந்த ராஜன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.