
மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் – கொலீஜியம் பரிந்துரை!
மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வைத்தியநாதனை நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது.
மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணிபுரிந்தவர் சஞ்சிஜ் பானர்ஜி. நவம்பர் 1-ந் தேதியுடன் சஞ்ஜிப் பானர்ஜி ஓய்வு பெற்றார். இதனையடுத்து மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வைத்தியநாதனை கொலீஜியம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜீயம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கோவையை சேர்ந்தவர். சென்னை சட்டக் கல்லுாரியில் சட்டப் படிப்பை முடித்த பின்1986-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக 2013-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர் 2015-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நிரந்தரமாக்கப்பட்டார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் வைத்தியநாதன்.
தற்போது மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள நீதிபதி வைத்தியநாதன் தந்தை வி.சுப்பிரமணியன் மிக சிறந்த தொழிற்சங்கவாதி. 1946-ம்ஆண்டு ஒயிட் காலர் எம்ப்ளாயீஸ் யூனியன் தொடங்க காரணமாக இருந்தவர். தமது தந்தையின் நூற்றாண்டில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றவர் நீதிபதி வைத்தியநாதன்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய போது, ஆண்கள்- பெண்கள் பயிலும் கிறிஸ்தவ கல்விநிலையங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் என்பது பாதுகாப்பு இல்லாதவை என ஒரு கருத்தை கூறி பின்னர் திரும்பப் பெற்றார் நீதிபதி வைத்தியநாதன். மனைவிக்கு எதிராக கணவன் வழக்கு தொடர குடும்ப வன்முறைச் சட்டம் போன்ற ஏற்பாடு இல்லாமல் போனது துரதிருஷ்டவசமானது என்றும் வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார் நீதிபதி வைத்தியநாதன். அதேபோல குடிசை மாற்று வீடுகளை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என உத்தரவிட்டவர் நீதிபதி வைத்தியநாதன்.
