
சிவகாசி அருகே கொலையான வாலிபரின் உடல், விருதுநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு..மருத்துவமனை சாலையில், உறவினர்கள் சாலை மறியல்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நமஸ்கரித்தான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்பாண்டி (23). நேற்றிரவு இவர் பட்டாசு வெடித்த போது, அதே பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரியுடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காளீஸ்வரியின் உறவினர்கள், தோட்டத்தில் இருந்த பொன்பாண்டியை கோடாரியால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் கேள்விப்பட்ட திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொன்பாண்டி உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலை, கொலையான பொன்பாண்டியின் உறவினர்கள், சிவகாசி அரசு மருத்துவமனையின் முன்பு திரண்டு வந்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி, அரசு மருத்துவமனை – ரயில் நிலையம் செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பதட்டமான சூழல் இருந்ததால், கொலையான பொன்பாண்டியின் உடலை உடற்கூறாய்வு செய்வதற்காக, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் உத்தரவிட்டார். எஸ்.பி. உத்தரவின் பேரில், சிவகாசி டி.எஸ்.பி. தனஞ்ஜெயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், இறந்த பொன்பாண்டியின் ஊரான நமஸ்கரித்தான்பட்டி பகுதியில், தொடர்ந்து பதட்டமான சூழல் இருந்து வருவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
