திருமணமான மகன் இறந்துவிட்டால், தாய் சொத்தில் பங்கு கேட்கமுடியாது’ தெளிவுபடுத்திய உயர் நீதிமன்றம்
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பவுலின் இருதய மேரி என்பவரின் மகன் மோசஸுக்கும், அக்னஸ் என்பவருக்கும், 2004-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மோசஸ் 2012-ல் இறந்துவிட்டார். உயில் எதுவும் எழுதி வைக்காத மோசஸின் சொத்துகளில் பங்கு கேட்டு, அவரின் தாய் பவுலின் நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், `மோசஸின் சொத்தில், அவரின் தாய்க்கும் பங்கு உள்ளது’ என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மோசஸின் மனைவி அக்னஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பி.எஸ்.மித்ரா நேஷா, “வாரிசுரிமைச் சட்டம் 42-வது பிரிவின்படி, கணவர் இறந்துவிட்டால் அவரின் விதவை மனைவி மற்றும் குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உள்ளது. மனைவியோ குழந்தைகளோ இல்லை என்றால், தந்தை சொத்துகளுக்கு வாரிசுதாரராவார். தந்தையும் இல்லை என்றால், தாய் மற்றும் சகோதர, சகோதரிகள் வாரிசுதாரராவார்கள்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, `திருமணமான மகன் இறந்த நிலையில், சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான கேள்வியே எழவில்லை. மனைவி மற்றும் குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உள்ளது. தாய் பங்கு கேட்க முடியாது" என்று தெரிவித்த நீதிபதிகள்,
தாய்க்கு பங்கு உண்டு’ என்ற நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவிய வழக்கறிஞர் மித்ரா நேஷாவுக்கு, நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.