Police Recruitment

ரூ.10 செல்லுபடியாகாதா.. மீண்டும் கிளம்பிய காயின் மேட்டர்.. மதுரை டூ திண்டுக்கல்லில் முளைத்த சிக்கல்

ரூ.10 செல்லுபடியாகாதா.. மீண்டும் கிளம்பிய காயின் மேட்டர்.. மதுரை டூ திண்டுக்கல்லில் முளைத்த சிக்கல்

10 ரூபாய் காயின் இப்போதுவரை தீரா பிரச்சனையாகி வரும்நிலையில், மீண்டும் இதுகுறித்த கோரிக்கைகள் பெருகி வருகின்றன.
மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009-ம் வருடம், 10 ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்தது. அதற்கு பிறகு, பத்து ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. காரணம், அடிக்கடி பரவி வரும் வதந்திகள் காரணமாக கடைக்காரர்கள், வணிகர்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவற்றை வாங்க மறுக்கின்றனர்…

முக்கியமாக பஸ், கண்டக்டர்கள், கடைக்காரர்கள், சில வங்கிகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.. தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழும அதிகாரிகள் இது தொடர்பாக ஆலோசித்தனர்..

ஊழியர்கள்: அப்போது, அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் பத்து ரூபாய் நாணயங்களை வாங்குமாறு மாநில அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும், பேருந்துகளில் இது தொடர்பான போஸ்டர்களை ஒட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
அதேபோல, வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வித மறுப்புமின்றி நாணயங்களை வாங்க வேண்டும். வங்கிகளிலும் இதுகுறித்த அறிவிப்பை ஒட்ட வேண்டும். ரூ.10 நாணயம் முன்பு போலவே சந்தையில் தொடர்ந்து புழக்கத்தில் இருப்பதை உறுதி செய்ய வங்கிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.. மேலும், அனைத்து வங்கிகளும் இணைந்து விளம்பரங்களை வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தனர்.

10 ரூபாய் நாணயம்: எனினும், 10 ரூபாய் காயின் செல்லுமா?செல்லாதா? என்ற குழப்பம் மக்களிடம் நீடித்து வருகிறது. கடைக்காரர்களும் இதுகுறித்த சில நடைமுறை சிக்கல்களையும் அவ்வப்போது கூறிவருகிறார்கள்.
பொதுமக்களிடம் 10 ரூபாய் காயின்களை கடைக்காரர்கள் பெற்றுக்கொண்டாலும், வங்கிக்கு சென்று அதை மாற்றுவதில் சிக்கல் உள்ளதாம்.. வங்கிகளில், இதற்காக வரிசையில் நின்று படிவத்தை நிரப்பிய பிறகுதான், அந்த காயின்களை தங்களுடைய சொந்த வங்கிக் கணக்கில் செலுத்த முடியுமாம்.. பெரும்பாலும், காயின்களை வாங்க மறுப்பதாக சொல்கிறார்கள். எனவே, சில இடங்களில் இன்னமும் 10 ரூபாய் காயின் தீராத பிரச்சனையாகவே உருவெடுத்துவிட்டது.
இப்போதுகூட, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பஸ்கள், வர்த்தக நிறுவனங்கள் சிலவற்றில் ரூ.10 நாணயம் வாங்க மறுப்பதாக மீண்டும் புகார்கள் கிளம்பி உள்ளன..

நாணயங்கள்: ரூ.10 நாணயம் வாங்க மறுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 3 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் சில வாரங்களுக்கு முன்பு, எச்சரித்திருந்தார். ஆனால், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இதே பிரச்சனை இன்னமும் நீடிக்கிறதாம்.
எனவே, 10 ரூபாய் காயினை வாங்க மறுப்போருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும், இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.