அடகு கடை உரிமையாளரிடம் ரூ. 1¼ லட்சம் திருட்டு; பெண் கைது
மதுரை சிம்மக்கல் எல்.என்.பி. அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சுதர்சன் (வயது35). இவர் ஜான்சி ராணி பூங்கா பகுதியில் உள்ள மதார்கான் டதோர் தெருவில் தங்க நகை அடகு கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு சுதர்சன் கடையை பூட்டி விட்டு ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். பணப்பையை மோட்டார் சைக்கிளில் தொங்க விட்டிருந்தார். வீட்டுக்கு சென்ற அவர் பணப்பையை எடுத்துச்செல்லவில்லை. சிறிது நேரம் கழித்து பணப்பை குறித்து ஞாபகம் வந்ததும் சுதர்சன் உடனே வீட்டின் வெளியே வந்து மோட்டார் சைக்கிளை பார்த்தார்.
அப்போது அதில் இருந்த பணப்பை திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது செல்லூர் கல் பாலம் காளிதோப்பு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மனைவி யோகபிரியா (வயது 31) பணப்பையை திருடிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.