ஓரினச் சேர்க்கை மோசடி; வலைவிரிக்கும் வலைத்தள கும்பல்
தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி காவல் சரகத்தின் போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் படி தங்கள் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் வாகன சோதனை மற்றும் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அந்நேரம் புளியங்குடி பேருந்து நிலையம் அருகே வேன் ஸ்டாண்ட் ஓட்டுநர்களிடம் ஒரு கும்பல் கடும் வாய்த் தகராறில் ஈடுபட்டிருக்கிறது. அது சமயம் போலீசார் அந்தப் பக்கமாக வந்தபோது அவர்களைப் பார்த்து பீதியாகிப் போன அந்தக் கும்பல், அவசர அவசரமாகக் காரில் ஏறித் தப்பியிருக்கிறது.
ஆனாலும் விடாத டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையிலான போலீஸ் டீம், காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்திருக்கிறார்கள். காரிலிருந்த ஆறு பேரையும் அப்படியே காவல் நிலையம் கொண்டு வந்திருக்கிறார்கள். டி.எஸ்.பி.யின் டீம் அவர்களிடம் உரிய பாணியில் நடத்திய விசாரணையில், அவர்கள் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், சிவகிரியைச் சேர்ந்த கவிக்குமார், அதே பகுதியின் கனகராஜ் உள்ளிட்ட நான்கு இளம் வாலிபர்களுடன் இரண்டு சிறார்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
அருகிலுள்ள சிவகிரி பகுதியில் டிண்டர் ஆஃப் எனும் செல்போன் செயலி மூலம் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைத்துக் கொண்டு, அவர்களிடம் ஆசை வார்த்தை பேசி ஓரினச் சேர்க்கைக்கு வரவழைப்பது வழக்கமாம். இவர்களின் தூண்டிலில் சிக்குபவர்களிடம் இருக்கும் பணத்தைப் பறித்துக் கொண்டு விரட்டியடித்து விடுவார்களாம். பல நாட்களாக இந்த ஓரினச் சேர்க்கை மூலம் கொள்ளையை நடத்திப் பணம் பார்த்திருக்கிறார்கள். பல பேர், மான அவமானத்திற்கு அஞ்சி போலீஸ் பக்கம் போகாததால், இந்த சம்பவம் குறித்து எந்த தகவலும் வெளியே கசியாமல் இருந்திருக்கிறது. தற்போது வேன் ஸ்டாண்ட் வாய்த்தகராறு மூலம் கொள்ளை ரகசியம் அம்பலமேறிவிட்டதாம்.
இதுகுறித்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், அந்த ஆறு பேர் மீதும் 307வது ஐ.பி.சி. பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளார். மேல் விசாரணை நடக்கிறது என்றார்.