நகைக்கடையில் பயங்கர தீ விபத்து: உரிமையாளரின் மருமகன் மூச்சுத்திணறி பலி
மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 78). இவர், தெற்குமாசி வீதியில் டி.எம். கோர்ட் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். கடையில் கீழ்தளத்தில் விற்பனை பிரிவும், முதல் தளத்தில் நகைகளை பாதுகாக்கும் லாக்கர் அறையும், 2-ம் தளத்தில் குடோனும் உள்ளன.
நேற்று இரவு கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் நகைகள் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 20-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்நிலையில் திடீரென்று 7.30 மணி அளவில் கடையின் முதல் தளத்தில் இருந்து கரும்புகை வெளிவந்தது.
இதைப்பார்த்த கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். இதற்கிடையே உரிமையாளரின் மருமகன் மோதிலால் (45) முதல் தளத்தில் இருந்தவர்களை எச்சரிக்கை செய்யவும், அவர்களை வெளியேற்றவும் விரைந்து சென்றார். அப்போது அங்கு மின்சார வயர்கள் தீப்பிடித்து எரிவதாக கூச்சல் போட்டார்.
ஆனால் அதற்குள் முதல் தளத்தில் புகை மூட்டம் அதிகமானது. எதிரே நிற்பவர் கூட தெரியாத அளவுக்கு புகை அடைத்துக் கொண்டதால் அவரால் கீழே வர முடியவில்லை. முன்னதாக அந்த தளத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். கீழ் தளத்தில் இருந்தவர்கள் மோதிலாலின் செல்போனை தொடர்பு கொண்டபோது, அதனை எடுக்கும் நிலையில் மோதிலால் இல்லை. இதனால் அங்கு பதற்றம் அதிகமானது.
இதுபற்றிய தகவலின் பேரில் மதுரை திடீர் நகர், மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் விபத்தில் மோதிலால் சிக்கிக்கொண்ட முதல் தளத்திற்கு சென்றனர். மேலும் தகவல் அறிந்து போக்குவரத்து போலீசாரும் அங்கு விரைந்து வந்து மாற்றுப்பாதையில் போக்குவரத்தை திருப்பிவிட்டனர்.
இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் கடையின் முதல் தளத்தில் இருந்த கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது மோதிலால் ஒரு அறையில் சிக்கி இருப்பது தெரியவந்தது.
அந்த கதவையும் உடைத்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அளவுக்கு அதிகமான புகையை சுவாசித்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள் ளது. பின்னர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்தில் மூச்சுத்திணறி பலியான மோதிலாலுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்