
முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 20 பவுன் தங்க நகை, ரூ.3 லட்சம் கொள்ளை
பர்கூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 20 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் ராணுவ வீரர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கந்திகுப்பம் அருகே உள்ள பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளியை சேர்ந்தவர் ராஜப்பன் (வயது 68). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி தங்கம்மாள். கடந்த 1-ந் தேதி இவர்கள் வீட்டை பூட்டி விட்டு காஞ்சீபுரம் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனத்தை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் கதவை அவர்கள் திறந்து பார்த்த போது பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது பீரோ கதவு உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டு இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகிய வற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர். இது குறித்து ராஜப்பன் கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
முன்னாள் ராணுவ வீரர் ராஜப்பன் வீட்டில் இல்லாததை நன்கு நோட்டமிட்டு கொள்ளையர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கந்திகுப்பம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 20 பவுன் தங்க நகைகள், ரூ.3 ல்டசம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
