2 மாத காதல்; திருமண வற்புறுத்தல்; மலையிலிருந்து தள்ளிவிட்டேன்!’ -வேலூர் சிறுமியைக் கொன்ற காதலன்திருமணத்துக்கு வற்புறுத்தியதால், கல்குவாரி மலை உச்சியிலிருந்து சிறுமியைத் தள்ளிவிட்டுக் கொன்றதாகக் கைதான காதலன் போலீஸாரிடம் கூறியிருக்கிறார். வேலூரை அடுத்த அரியூர் குப்பத்தைச் சேர்ந்தவர், சரவணன். இவரின் 17 வயது மகள், வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனை கேன்டீனில் வேலை செய்துவந்தார். கடந்த 14-ம் தேதி மதியம் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்ட அவர், திடீரென மாயமானார். அவரின் பெற்றோர், வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவுசெய்து சிறுமியைத் தேடிவந்தனர்.இந்த நிலையில், நான்கு நாள்களுக்குப் பிறகு, கடந்த 18-ம் தேதி வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த புதுவசூர் மலையில் உள்ள கல்குவாரியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமி சடலமாகக் கிடந்தார். அவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு, சிதைந்திருந்தது.கையில் குத்தப்பட்டிருந்த டாட்டூவை வைத்து... சடலமாகக் கிடந்தது, மாயமான சிறுமிதான் என்பதைப் பெற்றோர் மூலம் சத்துவாச்சாரி காவல்துறையினர் உறுதிசெய்தனர். இன்ஸ்பெக்டர் அழகுராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சிறுமி கடைசியாக சத்துவாச்சாரியை அடுத்த ரங்காபுரம் மூலக்கொல்லை பகுதியைச் சேர்ந்த சாந்தா என்பவரின் மகனான ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷுக்கு (23) போன் செய்தது தெரியவந்தது. வீட்டுக்குள் பதுங்கியிருந்த பிரகாஷை காவல்துறையினர் 20-ம் தேதி அதிகாலை சுற்றிவளைத்துப் பிடித்து கைதுசெய்தனர். விசாரணையில், கல்குவாரி மலை உச்சியிலிருந்து சிறுமியைக் கீழே தள்ளி கொலைசெய்ததாக பிரகாஷ் ஒப்புக்கொண்டார்.அவரிடம் விசாரித்தபோது, ``நானும் சரவணனின் மகளும் கடந்த 2 மாதங்களாகக் காதலித்துவந்தோம். அடிக்கடி ஆட்டோவில் அழைத்துச்செல்லும்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பல இடங்களுக்கு அழைத்துச்சென்றேன். இந்த நிலையில், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு சிறுமி வற்புறுத்தினார். வேறு சில ஆண் நண்பர்களுடனும் அவருக்குத் தொடர்பிருந்ததால், நான் திருமணத்துக்கு மறுத்தேன். என்னைக் கட்டாயப்படுத்தினார்.சம்பவத்தன்று, வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறுமியை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு புதுவசூர் மலைக்குச் சென்றேன். அங்கும் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியதால், எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் கல்குவாரி மலை உச்சியிலிருந்து அவரைத் தள்ளிவிட்டேன்.படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். அந்த நேரத்தில் அங்கு யாருமில்லை. கொலையை மறைக்கத் திட்டமிட்டேன். அதற்காக, என் உறவினரும் ஆட்டோ ஓட்டுநருமான ஏழுமலையின் மகன் நவீன்குமாரை (23) உதவிக்கு அழைத்தேன். அவரும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு மலைக்கு வந்தார். கல்குவாரிக்குள் இறங்கிச் சென்று, சிறுமியின் சடலம் அருகில் கிடந்த செல்போனை எடுத்து, அங்கிருந்த தண்ணீர் நிறைந்த குட்டையில் வீசினோம். பிறகு, சிறுமியின் கறுப்பு நிற பேக்கையும் எடுத்துக்கொண்டு, ஆட்டோவில் மலையிலிருந்து கீழே இறங்கிவிட்டோம். எங்கள் வீடு இருக்கும் மூலக்கொல்லை பகுதியில் உள்ள முட்புதரில் பேக்கை வீசிவிட்டோம்.சிறுமியின் சடலம் கிடைப்பதற்கு முந்தைய நாள் (17-ம் தேதி) இரவு 11 மணியளவில், வேலூர் வடக்கு காவல் நிலையத்திலிருந்து எனக்குப் போன் செய்தனர்.
சிறுமி காணவில்லை… நீதான் கடைசியா அந்தப் பொண்ணுகிட்ட செல்போன்ல பேசியிருக்க. காலையில் போலீஸ் ஸ்டேஷன் வா… உன்கிட்ட விசாரிக்கணும்’ என்று கூறினர். கொலை விவகாரம் தெரிந்திடுமோ’ என்று அச்சத்தில் இருந்தேன். அதேபோல், மறுநாள் காலையில் சடலத்தையும் போலீஸார் கைப்பற்றிவிட்டனர். விசாரணைக்குச் செல்லாமல் இருந்தேன். நவீன்குமார், வெளியில் என்ன நடக்கிறது என்று நோட்டம் பார்த்து வந்து எனக்குத் தகவல் சொல்லிக்கொண்டே இருந்தார்.சிறுமிக்கு ஏற்கெனவே பழக்கமான இரண்டு ஆண் நண்பர்களை அழைத்துவந்து காவல்துறையினர் விசாரிப்பதாகத் தெரியவந்தது.
எப்படியோ, நான் மாட்டிக்கொள்ளவில்லை’ என்று நிம்மதியாக இருந்த நேரத்தில் சிக்கிக் கொண்டேன்’ என்று கூறியதாகக் காவல்துறையினர் சொல்கிறார்கள். அதையடுத்து, சிறுமி கொலைக்கு உடந்தையாக இருந்த நவீன்குமாரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர். இரண்டு பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள். கொலைக்கு முன்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே தெரியவரும் என்று காவல்துறையினர் கூறினர்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்