தாம்பரத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு: தடுப்பை உடைத்து சென்ற மமக, விசிகவினர் கைது
சென்னை கிறிஸ்தவ கல்லூரிக்கு சொந்தமான இடத்தை தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மேயரின் அனுமதியின்றி சீல் வைத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மமக கவுன்சிலர்மு.யாக்கூப் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். அப்போது, மாநகராட்சி ஆணையர் அழகு மீனா ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து மமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. மேடை அமைக்கும் முயற்சியை போலீஸார் தடுத்ததால் சிறியசரக்கு வாகனத்தை மேடையாகமாற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுமார் 200 பேர் சண்முகம் சாலையில் திரண்டு, போலீஸுக்கு எதிராககண்டன முழக்கமிட்டனர்.ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் தடையைமீறி சண்முகம் சாலை மசூதியில்இருந்து பேரணியாக வந்தனர். அப்போது போலீஸார் தடுத்து நிறுத்தியதால், தடுப்புகளைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றதால் காவல்துறைக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.ஒருவருக்கு இதில் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், காவல் துறைக்கு ஒத்துழைப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் யாக்கூப் தலைமையில் தனியார் திருமண மண்டபத்துக்கு பேரணியாக நடந்து சென்று கைதாகினர்.