Police Department News

தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு எஸ்.பிக்கள் நியமனம்.. ATS ஸ்குவாடில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள்.. யார் இவர்கள்?

தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு எஸ்.பிக்கள் நியமனம்.. ATS ஸ்குவாடில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள்.. யார் இவர்கள்?

தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு எஸ்.பிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பிரிவான ATS இனி தீவிரவாதத்தை ஒடுக்க தீவிரமாகச் செயல்பட உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் அருகேயுள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன்பு, கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்த முபினின் வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப் பொருட்கள், ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு வாசகங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இந்த கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த தீவிரவாத சதிச்செயல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ‘தீவிரவாத தடுப்புப் பிரிவு’ அமைக்கப்படும் என்று அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தீவிரவாத தடுப்பு பிரிவு: கடந்த 2023 ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலின், 57.51 கோடி செலவில் தமிழக காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் 380-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட ‘தீவிரவாத தடுப்புப் பிரிவு’ அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
383 பேருடன் ATS: அதைத்தொடர்ந்து, தமிழக காவல்துறை டிஜிபி, தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பதற்கான முன்மொழிவு கடிதத்தையும், இந்த பிரிவை தொடங்குவதற்கான அத்தியாவசிய நிர்வாகச் செலவினங்களுக்காக ரூ.60 கோடி ஒதுக்கக் கோரியும் கடிதம் அளித்திருந்தார். அதனை ஏற்ற தமிழக அரசு, தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்தது.

மாஸ்! வருகிறது ஸ்பெஷல் ஃபோர்ஸ்.. 383 பணியாளர்களுடன் தீவிரவாத தடுப்புப் பிரிவு தொடங்க தமிழக அரசு ஆணை!

தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு 383 பணியாளர்களை சேர்க்கவும், 89 புதிய வாகனங்களை ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டது. பணியாளர்களுக்கான ஊதியம், நிர்வாகச் செலவுகள், கட்டணங்கள், வாடகை என ரூ.57 கோடி ரூபாய் மற்றும் திரும்பப் பெறப்படாத செலவினமாக தளவாடச் செலவுகளுக்காக ரூ.26 கோடியையும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும், புதிதாக தொடங்கப்படும் இந்த தீவிரவாத தடுப்புப் பிரிவு, தமிழக காவல்துறை நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி மேற்பார்வையின் கீழ், டிஐஜி தலைமையில் செயல்படும் என்றும், இதில் 4 எஸ்.பிக்கள், 5 ஏஎஸ்பிக்கள், 13 டிஎஸ்பிக்கள், 31 காவல் ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 383 பேர் இந்த பிரிவில் இடம்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த பிரிவு, தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நிகழும் குற்றங்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்துடன் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக, சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 இடங்களில் தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
2 எஸ்.பிக்கள் நியமனம்: இந்நிலையில் தான் சென்னை, கோவைக்கு, தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு புதிதாக எஸ்.பிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகர காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்த புக்யா சினேகா பிரியா சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புக்யா சிநேக பிரியா, தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆறாவது பட்டாலியன் கமாண்டண்ட்டாக பணியாற்றினார். கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் வந்தனா மாலிக் விருது பெற்றார். கடந்த 2002ல் கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இருந்த நிலையில், மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வு எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் மதுரை மாநகர காவல்துறை துணை ஆணையராக பணியாற்றி வந்தார்.

கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பியாக சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையில் கியூ பிராஞ்ச் சிறப்பு பிரிவு எஸ்பியாக பணியாற்றி வந்தார். முன்னதாக ஈரோடு மாவட்ட எஸ்.பியாக பணியாற்றினார். புதிதாக தொடங்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு முதல் எஸ்.பிக்களாக இவர்கள் இருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தீவிரவாதத்துக்கு எதிரான கடுமையான கண்காணிப்பு பணிகள் இனி நடைபெறும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.