
போலீஸ் வாகனத்தை நவீனமாக மாற்றும் மதுரை கைதிகள்
மதுரை சிறையில் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் கைதிகள், தற்போது போலீஸ் வாகனத்தை நவீனமாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக புதிதாக வெல்டிங், தச்சுத்தொழில் சேர்க்கப்பட்டுள்ளது.
இச்சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்கள் பேப்பர் கவர், மருத்துவ பேண்டேஜ், அலுவலக கோப்புகள், நெசவு, எண்ணெய், பலகாரம் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவாய் ஈட்டி வருகின்றனர். இவர்கள் உருவாக்கிய பொருட்களை ‘பிரிஜன் பஜார்’ மூலம் பொதுமக்களுக்கு சிறை நிர்வாகம் விற்று வருகிறது. தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு, கார வகைகள் மட்டும் ரூ.பல லட்சத்திற்கு விற்பனையாகி சாதனை படைத்தது
தற்போது வெல்டிங் தொழிலிலும் கைதிகள் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். சிவகங்கை எஸ்.பி., அரவிந்த் ஏற்பாட்டில் கண்காணிப்பு கேமராக்களுடன் சம்பவ இடத்திற்கு செல்லும் நடமாடும் வேனை ஆயுள் கைதி திருப்பதி தலைமையில் 4 கைதிகள் நவீனமாக மாற்றி வருகின்றனர்.
இப்பணியை நேற்று சிறை டி.ஐ.ஜி., பழனி, கண்காணிப்பாளர் சதீஷ்குமார் பார்வையிட்டனர். இதற்காக முயற்சித்த டெக்னிக்கல் எஸ்.ஐ., திருமுருகன் மற்றும் காவலர்களை பாராட்டினர்.
டி.ஐ.ஜி., பழனி கூறியதாவது:
தண்டனை முடிந்து கைதிகள் வெளியே செல்லும்போது அவர்கள் சொந்தமாக தொழில் செய்யும் வகையில் தேவையான பயிற்சிகளை அளிக்க ஏ.டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி புதிதாக பர்னிச்சர், வெல்டிங், தச்சுத்தொழில் கற்றுத்தர ஆரம்பித்துள்ளோம். இதற்காக தனியார் நிறுவனம் மூலம் கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட போலீஸ் வேனை வைபை வசதியுடன் 360 டிகிரி சுழலும் தன்மை கொண்ட 8 கேமராக்களுடன் நவீனமாக மாற்றும் பணியில் கைதிகள் ஈடுபட்டுள்ளனர். போலீஸ், அரசு, தனியார் துறை வாகனங்களை நவீனமாக மாற்ற தனி யூனிட் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
