
காவல் புலனாய்வு பெயரில் மிரட்டி கோடிக் கணக்கில் பணம் பறிப்பு: குறி வைக்கும் வெளிநாட்டு கும்பல்
தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வயதானவர்கள், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள நபர்கள், பெண்களை குறி வைத்து அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து கொரியர் நிறுவனங்களில் இருந்து பேசுவதுபோல் பேசி நூதன முறையில் மிரட்டி பணம் பறிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில், உஷாராக இருக்கும்படி சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: உங்களுக்கு கொரியர் நிறுவனங்களில் இருந்து வருவதுபோல், போன் அழைப்பு ஒன்று வரும். எதிர் முனையில் பேசுபவர்கள், ‘புலித்தோல், போதைப் பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள், போலி பாஸ்போர்ட்கள் மற்றும் சில கடத்தல் பொருட்கள் கொண்ட பார்சல்கள் உங்களது பெயருக்கு வந்துள்ளது.
அது சம்பந்தமாக மும்பை சைபர் க்ரைம், சிபிஐ, மத்திய குற்றப் பிரிவு உட்பட பல்வேறு புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை செய்ய வேண்டியுள்ளது என கூறி, போன் அழைப்பை மற்றொரு நபருக்கு பார்வேர்டு செய்வார்கள். பின்னர், எதிர் முனையில் காவல் துறை அதிகாரி போன்று பேசும் நபர், ‘ஸ்கைப் எனப்படும் சமூக வலைதள ஆப்பை நம்முடைய செல்போனில் பதிவிறக்கம் செய்ய சொல்லி அதன் மூலம் வீடியோ காலில் நம்மை தொடர்பு கொண்டு, உங்களது பெயரில் சட்ட விரோதமாக பல கோடி ரூபாய்க்கு பணப் பரிமாற்றம் நடைபெற்று உள்ளது.
மேலும், பல வங்கிகளில் கணக்கு தொடங்கி முறையற்ற பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. உங்களுடைய சேமிப்பு தொகை, நிலையான வைப்புத் தொகை போன்றவற்றை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. எனவே, நாங்கள் கொடுக்கும் வங்கி கணக்குக்கு அந்த பணத்தை உடனடியாக அனுப்பும்படி கூறுவார்கள். மேலும், அவர்களுடைய தொலைபேசி அழைப்பை துண்டித்தாலோ அல்லது அவர்கள் பேசுவதைப் பற்றி பிற நபர்களிடம் தெரிவித்தாலோ உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி கைது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றால் நாங்கள் சொல்வதுபோல் பணத்தை அனுப்பும்படியும், அந்த பணத்தை ஆய்வு செய்த பின்னர் மீண்டும் உங்களுடைய வங்கி கணக்குக்கு அனுப்பி விடுவதாகவும் கூறுவார்கள்.
மேலும், நாம் நம்புவதற்காக, நம்மை மிரட்டுவதற்காக ‘நாம் கடத்தலில் ஈடுபட்டு புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட உள்ளதாக‘ ஏற்கெனவே போலியாக தயார் செய்து வைத்திருந்த பத்திரிகை செய்திகளை ஸ்கைப் ஆப்பில் அனுப்பி வைப்பார்கள். அதை உண்மை என்று நம்பி, பயத்தில் பலர் தங்களுடைய வங்கி கணக்குகளில் உள்ள சேமிப்பு பணம் மற்றும் வைப்புத் தொகை பணத்தை சந்தேக நபர்கள் கொடுத்த வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்து ஏமாறுகிறார்கள். மேலும், நம்முறைய தனிப்பட்ட மற்றும் வங்கி விவரங்களை வைத்து நமக்கு தெரியாமல் நம்முடைய பெயரில் வங்கிகளில் தனிநபர் கடன் பெற்று அதன் மூலமாகவும் ஏமாற்றுகின்றனர். பணத்தை பெற்ற உடன் அனைத்து மெசெஜ்கள் மற்றும் தடயங்களை அழித்து விடுவார்கள்.
மேலும், இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் தங்களை போலீஸ் கண்டு பிடித்து விடக்கூடாது என்பதற்காக அடையாளம் தெரியாத நபர்களின் பெயரில் வங்கிகணக்கு மற்றும் தொலைபேசி எண்களை பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர். இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு பொது மக்களை ஏமாற்றி வருவதால் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதில் சிரமம் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறும்போது, ‘பொது மக்கள் அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து தொடர்பு கொள்ளும் நபர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். முன்பின் தெரியாத நபர்களிடம் நம்முடைய தனிப்பட்ட வங்கி சார்ந்த மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களை தெரிவிக்க கூடாது. அடையாளம் தெரியாத வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். ஏதேனும் பண இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபர் க்ரைம் உதவி எண் 1930 மற்றும் வலைதள முகவரி https://cybercrime.go.in ல் புகார் தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
