
பொது இடங்களில் செல்போனுக்கு சார்ஜ் போடாதீர்கள் சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
பொது இடங்களில் செல்போனுக்கு யுஎஸ்பி கேபிள் மூலமாக சார்ஜ் போடுவதால், அதன் மூலம் செல்போனில் உள்ள டேட்டாக்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக சென்னை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டனர்.
தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியால் உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு தற்போது தகவல் தொடர்பு அதிகரித்து விட்டது. ஒரு செல்போன் இருந்தால் போதும் எந்த தகவல் வேண்டும் என்றாலும் இருந்த இடத்தில் இருந்தே பெற்றுவிடலாம். வங்கி பரிவர்த்தனை முதல் பிடித்த பொருட்களை ஆர்டர் செய்வது என அனைத்தையும் வீட்டில் இருந்த படியே ஒரு சில நிமிடங்களில் மக்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
டெக்னாலஜி துறையில் புதிய புரட்சியே ஏற்பட்டு விட்டாலும், இணையம் மூலமாக நடைபெறும் மோசடிகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சில குறிப்பிட்ட வகை செயலிகளை பயன்படுத்தி ஒட்டுமொத்த செல்போனையே தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதும் சுருட்டும் மோசடிகள் நடப்பதையும் அவ்வப்போது பார்க்க முடிகிறது.
அதிலும் சமீப காலமாக, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் ஓடிபி போன்றவற்றை பயனர்களுக்கே தெரியாமல் அவர்களின் போன் வழியாகவே பெற்று, அதை பயன்படுத்தி ஹேக்கர்கள் பணத்தை திருடும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே தற்போது சார்ஜ் போடும் போது அதன் மூலமாகவும் தரவுகள் திருடப்படலாம் என்பதால் சென்னை சைபர் கிரைம் போலீசார் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அதன்படி, பொது இடங்களில் மக்கள் யுஎஸ்பி மூலம் சார்ஜ் போடக்கூடாது என்றும் யுஎஸ்பி மூலம் சார்ஜ் போடுவதால் தரவுகள் திருடப்பட வாய்ப்புள்ளது என்பதால், பொதுமக்கள் தங்கள் சொந்த சார்ஜர்களை பயன்படுத்தியே சார்ஜ்கள் போட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக செல்போன் சார்ஜிங் செய்யும் வசதி உள்ளது. இதில் சில இடங்களில் யுஎஸ்பி போர்ட்டும் உள்ளது.
இந்த யுஎஸ்பி போர்ட்களில் சைபைர் கிரைம் மோசடி கும்பல் யூ.எஸ்.பி போர்ட் போன்ற கேட்ஜெட்டை மறைமுகமாக பயன்படுத்தி, செல்போனில் உள்ள அனைத்து தரவுகளையும் அப்படியே திருடும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான், சென்னை சைபர் கிரைம் போலீசாரும் பொது இடங்களில் செல்போன்களை சார்ஜ் செய்யும் போது கவனமாக போட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
