சென்னை மின்சார ரயிலில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்து, சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, சுண்ணாம்பு குளம் பகுதியைச் சேர்ந்தவர் மவுலீஸ் (24). இவர் தன்னுடைய மூன்று நண்பர்களுடன் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்பட்ட மின்சார ரயிலில் கடந்த 6.3.2024-ம் தேதி பயணித்தார். அப்போது 20 வயது முதல் 25 வயதுக்குள்ள 5 பேர், கவுரப்பேட்டை ரயில் நிலையத்தில் ஏறினர். பின்னர் அவர்கள் கத்திமுனையில் அங்கிருந்த மவுலீஸ் உள்பட சில பயணிகளிடம் செல்போன் மற்றும் பணத்தைப் பறித்தனர். அப்போது நடந்த தகராறில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் கொள்ளை கும்பல் கவரப்பேட்டை ரயில் நிலையத்துக்கும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்துக்கும்இடையே அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து மவுலீஸ் உள்பட கத்திக் குத்தில் காயமடைந்த பயணிகள், கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதில் 4 செல்போன்கள், 5,500 ரூபாயை கொள்ளைக் கும்பல் பறித்துச் சென்றதாகக் குறிப்பிட்டனர். காயமடைந்த பயணிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மின்சார ரயிலில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க ரயில்வே ஏ.டி.ஜி.பி வனிதா உத்தரவின்பேரில் டி.ஐ.ஜி ராமன் மேற்பார்வையில் டி.எஸ்.பி ரமேஷ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்தனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள், செல்போன் சிக்னல்களை வைத்து விசாரித்தனர்.
விசாரணையில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த லெவின் (26), திருப்பாலைவனத்தைச் சேர்ந்த விஜி (24) ஆகியோர் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். இந்த வழக்கில் கணேஷ், பிரவீன், வெங்கடேஷ் உள்பட சிலரை போலீஸார் தேடிவருகிறார்கள்.
மின்சார ரயிலில் ஏதாவது பயணிகளுக்கு அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், காவல்துறை உதவி நம்பருக்கு பயணிகள் தொடர்பு கொள்ளலாம் என ரயில்வே போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.