
சேலத்தில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் இளைஞர் இறந்து கிடந்தது குறித்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம், எருமாபாளையம் அருகே நேதாஜி நகர்ப் பகுதியில் பழனி என்பவருக்குச் சொந்தமான வீடு இருந்து வருகிறது. இந்த வீட்டின் ஒரு பகுதியை, பழனி வாடகைக்கு விட்டு வருகிறார். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணமான தம்பதி, வீடு வாடகைக்குக் கேட்டு வந்துள்ளனர். அப்போது தங்களது பெயர் ரவி- பிரியா என்று வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். அதனை நம்பி வீட்டு உரிமையாளரும் மாதம் 2,000 ரூபாய் எனக் கூறி, வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த 13.03.2024 அன்று மாலை 7 மணியளவில் மேற்கண்ட தம்பதிதங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்டு பழனி கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அன்னதானப்பட்டி சரக காவல் உதவி ஆணையர் ராமமூர்த்தி, கிச்சிப்பாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர், வெளிப்பக்கமாக பூட்டிக்கிடந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரவியின் உடல் சமையலறையில் அழுகிய நிலையில் கிடந்தது.
பின்னர் உடலைப் பரிசோதித்த பாரன்சிக் நிபுணர் வடிவேல் தலைமையிலான குழுவினர் நெற்றியில் வெட்டுக் காயமும், அருகில் ரத்தக்கரையுடன் அருவாமணையும் கிடந்து கண்டெடுத்தனர். மேலும் இறந்துகிடந்த நபரின் ஆணுறுப்பு வீக்கத்துடனும் இருந்துள்ளது. அதன்மூலம் கொலைசெய்யப்பட்டுக் கிடந்த ரவி உடலுறவு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவரின் மனைவி பிரியா வீட்டில் இல்லாததால், இந்தக் கொலையை அவர் செய்திருக்கக்கூடும் எனச் சந்தேகித்த போலீஸார், அக்கம் பக்கத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரவி எப்போதாவது மட்டுமே வீட்டுக்கு
வந்து செல்வதும், பிரியா வீட்டில் தனியாகவே இருந்து வந்ததும் தெரியவந்திருக்கிறது.
சம்பவத்தன்று பிரியா பக்கத்து வீட்டிலிருந்த பெண் ஒருவரிடம் பேசிவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. அதன்மூலம் போலீஸார் ரவி வந்த இரு சக்கர வாகனம் வீட்டின் அருகே கிடந்ததைக் கண்டு, அந்த எண்ணை வைத்து முகவரி எடுத்தபோது, அதில் சேலம் சின்ன திருப்பதியைச் சேர்ந்த தாவூத் மகன் நிஷார் பாஷா என்பது தெரியவந்தது. நிஷார் பாஷா, ரவி என்ற பெயரில் இங்கு வசித்து வந்தது தெரியவந்தது. அதையடுத்து போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இறந்துபோன ரவி எனப்படும் நிஷார் பாஷாவின் குடும்பத்தினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்து வரும் பிரியாவை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
