
தூத்துக்குடி: செலவுக்குப் பணம் தராததால் ஆத்திரம்; கோயிலில் வைத்து, தந்தையைக் கொன்ற மகன்!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் செல்லையா. கார் டிரைவரான இவர், வயதான நிலையிலும் கிடைத்த வேலைகளைச் செய்து வந்தார். இவரின் மனைவி சரோஜா. இவர்களின் மகன் வேதநாயகதுரை. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சரோஜா, உடல்நலக் குறைவினால் உயிரிழந்த நிலையில், தனது சொந்த வீட்டை விற்பனை செய்த செல்லையா, சாத்தான்குளத்தில் உள்ள கரையடி சுடலை மாடசாமி கோயில் வளாகத்தில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலில் இரவு தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
செல்லையாவின் மகன் வேதநாயகதுரை, சென்னையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். சிறுநீரக பாதிப்பால் கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊரான சாத்தான்குளத்திற்கு வந்து நெல்லை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 12-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரின் தந்தை செல்லையா பிள்ளையார் கோயில் வளாகத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.
சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார், வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். கோவில் வளாகம் முழுவதும் படிந்திருந்த ரத்தக்கறையை செல்லையா அணிந்திருந்த லுங்கியாலேயே துடைத்து அப்பகுதியில் வீசியது தெரியவந்தது. கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவை போலீஸார் ஆய்வு செய்தபோது, அது செயல்படாத நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
மோப்பநாய் அங்குமிங்கும் ஓடிய நிலையிலும் யாரையும் பிடிக்கவில்லை. போலீஸாரின் விசாரணையில் செல்லையாவின் மகன் வேதநாயகதுரையே இத்தகைய கொடூரத்தைச் செய்தது தெரியவந்தது. தன் தந்தையை கொலைசெய்ததை அவரும் ஒப்புக் கொண்டார். போலீஸாரின் விசாரணையில், “என் தந்தையிடம் செலவுக்குப் பணம் கேட்டேன். பணம் தர மறுத்தார். அப்போது இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. என்னையும் என் தாயாரைப் பற்றியும் அவதூறாகப் பேசினார். அதனால் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தேன்” எனக் கூறியுள்ளார். பெற்ற மகனே தந்தையை கொலைசெய்த சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
