உளுந்து மூட்டைகளுடன் மறைத்து வைத்து கப்பல் மூலம் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 6 டன் குட்கா பறிமுதல்
கர்நாடகாவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்கள், மாதவரம் ரவுண்டானா அருகே தனியார் சேமிப்பு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சுங்கவரித் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நேற்று முன்தினம் சுங்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட தனியார் குடோனில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கிருந்த ஒரு கன்டெய்னர் லாரியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட உளுந்து மூட்டைகள் இருந்தது.
அதை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, உளுந்து மூட்டைகளுக்கு மத்தியில், குட்கா பொருட்களும் மூட்டைகளாக கட்டி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
அந்த கன்டெய்னரில் இருந்து 6 டன் குட்கா புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.
இதை தொடர்ந்து அந்த கன்டெய்னர் பெட்டியில் இருந்த ஆவணங்களின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா புகையிலை, போதை பாக்கு பொருட்களை கன்டெய்னர் லாரி மூலம் கடத்தி வந்து, அதனை மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள தனியார் குடோனில் பதுக்கி வைத்து, பின்னர், கப்பல் மூலம் சிங்கப்பூருக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கூகுள் பே மூலம் விற்பனை
ஓட்டேரி ஸ்டாரன்ஸ் சாலை பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் ஓட்டேரி போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அந்த கடையில் இருந்து சுமார் 50 பாக்கெட் குட்கா பொருட்கள் மற்றும் மாவா தயாரிக்க பயன்படும் 3 கிலோ மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கடையை நடத்தி வந்த ஓட்டேரி ஸ்டாரன்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த பங்கஜ் குப்தா (33) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில்,அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது பகத் (25) என்பவர் கூகுள் பே மூலம் பணம் அனுப்பினால் பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை வரவழைத்து, அதனை உரிய முறையில் டெலிவரி செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து முகமது பகத் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
2 பேர் மீதும் வழக்குப்பதிந்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.