சென்னை தாம்பரத்தில் போலி பத்திரம் மூலம் ரூ.300 கோடி சொத்தை அபகரிக்க உதவிய சார்பதிவாளர் கைது: 2 உதவியாளர்களும் சிறையில் அடைப்பு; மேலும் பல அதிகாரிகளுக்கு தொடர்பு?
சென்னை: சென்னை தாம்பரத்தில் 3 ஏக்கர் நிலத்தை ஒரு கும்பல் போலி ஆவணம் மூலம், பதிவு செய்வதற்காக தாம்பரத்தில் சார்பதிவாளராக பணியாற்றிய மணிமொழியனிடம் தொடர்பு கொண்டுள்ளனர்.
அவரும், அவரது உதவியாளர்கள் லதா, சபரீஸ் ஆகியோர் உதவியுடன் போலியான பத்திரத்தை பதிவு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.
அதன்படி, ரூ.300 கோடி மதிப்புள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை ஏற்கனவே கிரையம் செய்ததுபோல அடமான பத்திர ஆவணத்தை நீக்கிவிட்டு கிரைய பத்திர ஆவணத்தை சேர்த்து ஒளிவருடல் செய்துள்ளனர்.
பின்னர் ஈசியிலும் அதை பதிவேற்றம் செய்துள்ளனர்.இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று போலீசில் 2021 செப்டம்பர் மாதம புகார் செய்தார்.
ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் குற்றம் நடந்தது உண்மை என்று தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, உதவியாளர்கள் லதா, சபரீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த குற்றத்திற்கு மணிமொழியன்தான் முக்கியமானவர் என்று தெரியவந்தது.
அப்போது தாம்பரத்தில் சார் பதிவாளராக இருந்த மணிமொழியன், தற்போது கோவை கணபதியில் சார்பதிவாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இதனால் சிபிசிஐடி போலீசார் மணிமொழியனை கைது செய்தனர்.
பின்னர் அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், ஈசியில் பதவி வேற்றம் செய்ய அன்றைய நிர்வாக மாவட்டப்பதிவாளர் ரவீந்திரநாத் எட்டு முறை வில்லங்க சான்றை திருத்தம் செய்துள்ள நிலையில் ரவித்திரநாத்திற்கு எதிராக கைதான நபர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் அவர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
இதனால், இந்த விவகாரத்தில், மேலும் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது