கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (54). அவரின் மனைவி விசித்ரா (46). இந்தத் தம்பதிக்கு ஸ்ரீநிதி (25), ஜெயநிதி (14) என்ற 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஸ்ரீநிதி கனடாவில் படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் நான்கு பேரும் தூங்கச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் பணிபுரியும் பெண் பணியாளரை நாளை வேலைக்கு வர வேண்டாம் என ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனிடையே ராமச்சந்திரனின் சகோதரி வழக்கம்போல் அவர்களை பார்ப்பதற்காக வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் உள்ள அறை ஒன்றில் 4 பேரும் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அவர்களை பரிசோதித்த போது, நான்கு பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடன் தொல்லை காரணமாக நான்கு பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்தார்களா அல்லது அவர்களின் தற்கொலைக்கு வேறு எதாவது காரணம் உள்ளதா என்று போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் ராமச்சந்திரன், ஒரு ரைஸ் மில் நடத்தி வந்தார். அதில், சுமார் ரூ.18 கோடிக்கு கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடனில் இருந்து சமீபத்தில் மீண்டு வந்த ராமச்சந்திரன், தற்போது மது பாட்டில்களுக்கு பயன்படுத்தப்படும் மூடிகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை, ரைஸ் மில் வளாகத்திலேயே நடத்தி வந்துள்ளார்.
அந்த வளாகத்திலேயே அவர்களது வீடும் அமைந்துள்ளது. இந்நிலையில் அருகில் உள்ள காலியிடத்தில் வீடு ஒன்றை ராமச்சந்திரன் கட்டி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு தான் ஶ்ரீநிதி வீட்டுக்கு வந்துள்ளார். விசித்ராவும் பெண்களுக்கான துணிக்கடை நடத்தி வந்துள்ளார். கணவன், மனைவி இருவரும் மிகவும் தைரியமானவர்கள் என்று கூறப்படுகிறது. அவ்வளவு பெரிய கடனில் இருந்து மீண்டவர்கள், சமீபகாலமாக வேறு சில பிரச்னைகளால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கான ஆலோசனையும் எடுத்து வந்துள்ளனர். திடீரென குடும்பத்துடன் தற்கொலை செய்திருப்பது அவர்கள் உறவினர், நண்பர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.