நண்பனிடம் ரூ.19.5 லட்சம்; உறவினரிடம் ரூ.32 லட்சம்!"- திருடன் கையில் சாவியைக் கொடுத்த ஏடிஎம் ஊழியர்
பகலில் ஏடிஎம்-களுக்கு பணத்தை நிரப்ப கார் ஓட்டுவேன், இரவில் ஐ.டி.நிறுவன ஊழியர்களை அழைத்துச் செல்வேன். இப்படி பிஸியாக இருந்த நான் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்தே செலவழிப்பேன்” என்று டிரைவர் அன்புரோஸ் போலீஸாரிடம் கூறியுள்ளார்.
சென்னையில் ஏடிஎம்-களுக்குப் பணத்தை நிரப்ப வந்தபோது 52 லட்சம் ரூபாயுடன் கார் டிரைவர் அன்புரோஸ் மாயமானார். அவரைப்பிடிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் இணை கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில் உதவி கமிஷனர் அனந்தராமன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், சந்துரு, புகழேந்தி, ராஜீவ் பிரின்ஸ் ஆருண் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. மன்னார்குடியிலிருந்து பெரம்பூர் பகுதிக்கு வந்த கார் டிரைவர் அன்புரோஸை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ஏடிஎம் பணம் 51,54,250 ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மீதமுள்ள தொகையை அன்புரோஸ் செலவழித்துவிட்டதாக போலீஸாரிடம் கூறியுள்ளார்.கார் டிரைவர் அன்புரோஸிடம் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அன்புரோஸ். இவரின் மனைவி தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வருகிறார். பகலில் ஏடிஎம்-களுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்துக்கும் இரவில் ஐ.டி.நிறுவன ஊழியர்களை அழைத்துச் செல்லும் என இரண்டு வேலைகளை அன்புரோஸ் செய்துவந்துள்ளார். அன்புரோஸ் மீது ஏற்கெனவே மாதவரம் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கில் அவர் சிறைக்கும் சென்றுள்ளார்.குற்றப் பின்னணி கொண்ட அன்புரோஸை எப்படி முக்கியமான பணிகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பணியமர்த்தினார்கள் என்றுதான் தெரியவில்லை. திருடன் கையில் சாவி கொடுத்ததுபோல 52 லட்சம் ரூபாயை அன்புரோஸ் பொறுப்பில் ஏடிஎம் நிறுவன ஊழியர்கள் விட்டுச் சென்றுள்ளனர். வேளச்சேரியில் உள்ள ஏடிஎம் முன்பு காரை நிறுத்தியிருந்த அன்புரோஸ், தண்ணீர்லாரி எதிரில் வந்ததும் அதற்கு வழிவிட காரை எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் அவர் பணத்துடன் மாயமாகிவிட்டார். பணத்துடன் சென்ற அவர் அதை மறைத்து வைக்க இடத்தைத் தேடியுள்ளார். அப்போது, அன்புரோஸின் நண்பர் ஒருவர் 24 மணி நேரமும் குடிபோதையில் இருப்பார். அதனால் அவரின் வீட்டில் 19.5 லட்சம் ரூபாயை மறைத்துவைக்க அன்புரோஸ் முடிவு செய்துள்ளார்.குடிகார நண்பனுக்கு மதுபாட்டிலோடு சென்ற அன்புரோஸ் அவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவரின் வீட்டில் நண்பனுக்கே தெரியாமல் பணத்தை ஒரு பையில் மறைத்துவைத்துவிட்டு அங்கிருந்து மனைவியின் சகோதரியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற அன்புரோஸ் பசிக்கிறது என்று கூறியுள்ளார். உடனே அன்புரோஸின் மனைவியின் சகோதரி, தோசை மாவு வாங்க கடைக்குச் சென்றுள்ளார். அந்தச் சமயத்தில் 32 லட்சம் ரூபாயை அங்கு மறைத்துவைத்துவிட்டு புறப்பட்டுள்ளார். தன்னுடைய செலவுக்காக 50,000 ரூபாயை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். அன்புரோஸ் மறைத்துவைத்த பணம் குறித்த தகவல்கள் நண்பனுக்கும் மனைவியின் சகோதரிக்கும் தெரியவில்லை. போலீஸார் அவர்கள் வீட்டுக்குச் சென்று பணத்தை மீட்டபோது இருவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மன்னார்குடியில் உள்ள மாமனார் வீட்டுக்கு அன்புரோஸ் சென்ற தகவல் கிடைத்ததும் ஒரு டீம் அங்கு சென்றது. உடனே அங்கிருந்து பெரம்பூர் வந்துள்ளார் அன்புரோஸ். இந்தத் தகவல் கிடைத்ததும் அங்கு அவரைக் கைது செய்தோம். தன்னுடைய செலவுக்காக அன்புரோஸ் 50,000 ரூபாயில் 5,000 மதிப்புள்ள விலையுர்ந்த காஸ்ட்லி மதுபாட்டிலை வாங்கிக் குடித்துள்ளார். அந்தப் போதையில் இருந்த சமயத்தில் அன்புரோஸிடமிருந்த பணத்தை ஒரு கும்பல் திருடிச் சென்றுள்ளது. அவர்கள் யாரென்று தெரியவில்லை. உண்மையிலேயே அன்புரோஸிடமிருந்து பணம் கொள்ளை போனதா என்று விசாரித்துவருகிறோம்" என்றார்.அன்புரோஸிடம் எதற்குப் பணத்தைத் திருடினாய் என்று போலீஸார் கேட்டதற்கு,
இரண்டு இடங்களில் வேலை பார்த்தாலும் மதுவுக்காக அதிகளவில் செலவழித்தேன். அதனால் கடந்த 2 மாதங்களாக காருக்கு இஎம்ஐ செலுத்தவில்லை. இதனால் காரைப் பறிமுதல் செய்வதாக லோன் கொடுத்தவர்கள் கூறினர். கார் இல்லை என்றால் வேலை செய்ய முடியாது. அதனால்தான் பணத்தைத் திருடினேன்” என்று கூறியுள்ளார்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்