கஞ்சா, மது பாட்டிலுடன் 2 பெண்கள் கைது
மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் ஆலோசனை பேரில், கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் வாழைத்தோப்பு சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கை சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த வழியாக வந்த 2 பெண்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். எனவே போலீசார் சந்தேகத்தின் பேரில், அவர்களது உடைமைகளை சோதனை செய்து பார்த்தனர். அப்போது அதில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் 4 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து மேற்கண்ட 2 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் சிந்தாமணி முத்துராமலிங்கம் மனைவி விஜயலட்சுமி (வயது 40), வாழைத்தோப்பு முத்து மனைவி சாந்தி (42) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்றதாக மேற்கண்ட 2 பெண்களையும் கீரைத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.