புகை மண்டலமான தென்காசி.. பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. சிதறிய கட்டிடங்கள்
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஆலையில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் மைப்பாறை பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த பட்டாசு ஆலையில் வழக்கம்போல பணிகள் நடந்து வந்தது. 40 முதல் 50 ஊழியர்கள் இன்று இந்த பட்டாசு ஆலையில் பணிபுரிந்துள்ளனர். இந்த நிலையில் இன்று மதிய நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால், ஆலையில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
நல்ல வேளையாக பட்டாசு ஆலையில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் சாப்பிட சென்றிருந்தபோது இந்த விபத்து அரங்கேறியுள்ளது. விபத்து ஏற்பட்டதும் தொழிலாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். மேலும் உடனடியாக விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் ஊழியர்கள் விரைந்து வந்தனர்.
ஆனால் தீ விபத்தால் எழுந்த கரும்புகை காரணமாக தீயணைப்பு வீரர்களால் பட்டாசு ஆலைக்குள் செல்ல முடியவில்லை. எனினும் ஒரே ஒரு தீயணைப்பு வாகனம் மட்டும் உள்ளே சென்றுள்ளது. இதேபோல் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ பரவி அருகில் உள்ள வயல்களுக்கும் பரவியது. இதில், சுமார் 44 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் பயிர்களில் தீ பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.