Police Department News

திருச்சி நெடுஞ்சாலை.. 2 கிமீக்கு ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள்! பரனூர் டோலில் அடிதடி

திருச்சி நெடுஞ்சாலை.. 2 கிமீக்கு ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள்! பரனூர் டோலில் அடிதடி

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட அடிதடியால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 2 கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டை அடுத்த பரனூரில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியை கடந்து தினமும் பல லட்சம் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் தான் இன்று சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த பாலு என்பவர் இன்று மாலை வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

பாலு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்னையில் இருந்து செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். செஞ்சியில் உள்ள உறவினர் வீட்டில் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

பரனூர் சுங்கச்சாவடியை வாகனம் அடைந்தது. அந்த சமயத்தில் பாஸ்ட் டேக் செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் பாலுவுடன் வந்தவர்கள் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே கைக்கலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இதில் பாலுவுடன் வந்த முருகன் என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாலு, அவருடன் வந்தவர்கள் மற்றும் பிற வாகனங்களில் வந்தவர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பரனூர் சுங்கச்சாவடி வழியாக வாகனங்களின் இயக்கம் என்பது முடங்கியது. இதனால் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து 2 கிலோமீட்டர் தொலைவுக்கு நின்றன. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பாலு மற்றும் அவருடன் இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.