


ஆயுதமேந்திய கொள்ளைக்காரர்களை அடித்து விரட்டிய தாய், மகள்
தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தின் பேகம்பேட் வட்டாரத்தில் தன் பதின்ம வயது மகளுடன் வசிக்கிறார் அமிதா மஹ்னோட் எனும் மாது.
சென்ற வியாழக்கிழமை (மார்ச் 21) பிற்பகலில் அவர்களது வீட்டிற்கு அழையா விருந்தாளிகளாக வந்தனர் ஆயுதமேந்திய கொள்ளைக்காரர்கள் இருவர்.
‘கூரியர்’ அஞ்சல் சேவை வழங்குவோரைப்போல் நடித்து வீட்டிற்குள் நுழைந்த சுஷில் குமார், பிரேம்சந்திரா எனும் இருவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை கூறியது.
தலைக்கவசம், முகக்கவசம் போன்றவற்றை அணிந்து அடையாளத்தை மறைத்துக்கொண்டு, கத்தி, நாட்டுத் துப்பாக்கியுடன் அவ்விருவரும் அமிதாவின் வீட்டில் நுழைந்தனர்.
ஆனால், திருவாட்டி அமிதா தற்காப்புக் கலை வல்லுநர் என்று அவர்களுக்குத் தெரியாது.
பணிப்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து ஒருவர் மிரட்ட, அமிதாவின் மகளுடன் சண்டையிட்டார் துப்பாக்கிக்காரர்.
சிறுமி அந்த ஆடவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்தபோதும் ஆடவர் தப்பியோடிவிட்டார். சமையலறையில் கத்தியுடன் இருந்த மற்றொருவரை, சத்தம் கேட்டு உதவிக்கு வந்த அக்கம்பக்கத்தினர் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கொள்ளையடிக்க வந்த இருவரில் ஒருவர் 2022 தீபாவளி நேரத்தில் அமிதாவின் வீட்டைச் சுத்தப்படுத்த வந்தவர் என்று தெரிகிறது.
சவான சூழலில் துணிச்சலுடன் செயல்பட்ட தாய், மகளைக் காவல்துறையினர் பாராட்டி, கௌரவித்தனர்.
