விவசாயி கொலை- உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகுமுத்து என்பவரது மகன் துர்க்கை ஈஸ்வரன் (வயது 32).
விவசாயியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் கைக்குழந்தை உள்ளது.
இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி வீட்டிலிருந்து போன துர்க்கை ஈஸ்வரன் 17-ந் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
ஆனால் அதிக மது போதையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கருதிய குடும்பத்தினர் அவரது உடலை புதைத்து விட்டனர்.
இந்தநிலையில் துர்க்கை ஈஸ்வரனின் இறப்பு சான்றிதழ் வழங்குவதற்காக விசாரணை மேற்கொண்ட கிராம நிர்வாக அலுவலர் பிரபுவிடம் சிலர் துர்க்கை ஈஸ்வரனின் மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
உடல் தோண்டியெடுப்பு இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பிரபு அளித்த புகாரின் பேரில் துர்க்கை ஈஸ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அதே ஊரை சேர்ந்த ராமேஸ்வரன் (45) என்பவர் முன்விரோதம் காரணமாக துர்க்கை ஈஸ்வரனை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் துர்க்கை ஈஸ்வரனின் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி துர்க்கை ஈஸ்வரனின் உடல் புதைத்த இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர் டாக்டர்கள் குழுவினர் அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றதும் அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.