
ஹாங்காங்கில் டீப் பேக் யுக்தியை பயன்படுத்தி ரூ.207 கோடி மோசடி
டீப் பேக் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப மோசடி வாயிலாக, ஹாங்காங்கை சேர்ந்த நிறுவனம் 207 கோடி ரூபாயை இழந்துள்ளது. டீப் பேக் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப மோசடியை பயன்படுத்தி, பிரபலங்களின் முகத்தை வேறு நபர்களின் உடலுடன் பொருத்தி வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
இதன் அடுத்த கட்ட பாய்ச்சலாக, மிக பெரிய பொருளாதார குற்றங்களுக்கு இந்த டீப் பேக் தொழில் நுட்பத்தை பயன்படுத்த துவங்கியுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள ஹாங்காங்கின் பிரபல நிறுவனத்தில், நிதி பிரிவில் பணியாற்றி வரும் ஊழியரின் மொபைல் போனுக்கு கடந்த மாதம் ஒரு குறுஞ் செய்தி வந்தது. செய்தியை அனுப்பியவர் பிரிட்டனில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையகத்தில் இருக்கும் தலைமை நிதி அதிகாரி.
உடனடியாக, வீடியோ அழைப்பு வாயிலாக மீட்டிங்கில் பங்கேற்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. உயரதிகாரியே கூறியதால், அந்த குறுஞ் செய்தியில் இருந்த லிங்கை க்ளிக் செய்த ஊழியர் வீடியோ மீட்டிங்கில் பங்கேற்றார்.
அந்த அழைப்பில், தலைமை நிதி அதிகாரியை தவிர, அந்நிறுவனத்தில் இவருக்கு நன்கு பழக்கமான வேறு சில ஊழியர்களும் இருந்தனர்.
வழக்கம் போல மீட்டிங் விறுவிறுப்பாக நடந்தது அந்த மீட்டிங்கின் போது தலைமை நிதி அதிகாரி உத்தரவிற்கு இணங்க ஹாங்காங்கில் உள்ள. 15 வங்கி கணக்குகளுக்கு, 207 கோடி ரூபாய் நிதியை அந்த ஊழியர் ஆன்லைன் வாயிலாக
உடனுகுடன் பரிமாற்றம் செய்தார். மீட்டிங் முடிந்து ஒரு வாரத்திற்கு பின் ஏதோ தவறு நடந்திருப்பதாக அந்த ஊழியருக்கு உறுத்தல் ஏற்பட்டது
தோண்டி துருவி விசாரித்த போது அந்த வீடியோ அழைப்பே போலியானது என்பது தெரிய வந்தது.
மீட்டிங்கில் வந்த தலைமை நிதி அதிகாரி உட்பட அனைவருமே அவரது நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்ற தகவலை கேட்டு அதிர்ந்து போனார்
இணையத்தில் கிடைக்கும் இவர்களது அலுவலக. ஆன்லைன் மீட்டிங் வீடியோக்களை வைத்து செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வாயிலாக டீப் பேக் செய்யப்பட்ட போலியான வீடியோவால் தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரிய வந்தது
இந்த மோசடி தொடர்பாக ஹாங்காங் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏமாற்றப்பட்ட நிறுவனம் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
