கோவை சிறுமி வன்கொடுமை வழக்கு…குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்கு…!
கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்த 1- ஆம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி, கடந்த மார்ச் 25- ஆம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போனார். அடுத்த நாளான 26- ஆம் தேதி வீட்டின் எதிரே உள்ள வீட்டின் பின்புறத்தில் இருந்து துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கோவையில் பல இடங்களில் போராட்டமும் நடைபெற்றது.பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமியின் வீட்டிற்கு எதிரே மனைவியை பிரிந்து பாட்டி வீட்டில் வசித்து வந்த தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை 31- ஆம் தேதி கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கை கோவை மகளிர் நீதிமன்றம் விசாரித்தது. கடந்த 16- ஆம் தேதி அரசுத்தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், எதிர்தரப்பு இறுதி வாதம் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்ட போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு 27- ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதி ராதிகா அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தோஷ்குமாரை குற்றவாளி என தீர்ப்பளித்த கோவை சிறப்பு நீதிமன்றம், அவருக்கு ஆயுள்தண்டனை, தூக்குதண்டனை வழங்கியதுடன் ரூ.2000 அபராதம் வழங்கி தீர்ப்பளித்தது.நீதிமன்றத்திற்கு வெளிய மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், குற்றவாளிக்கு தூக்குதண்டனை வழங்கப் பட்டது மகிழ்ச்சியளிப்பதாக சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் டிஎன்ஏ சோதனையில் மற்றொரு நபருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில், அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தாய் மனுத்தாகல் செய்தார். அந்த மனுவையும் விசாரிக்க கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்