
திருச்சி மாநகரில் தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து பணத்தை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
திருச்சி மாநகரில் கடந்த 13.05.24-ந்தேதி உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைரோடு பகுதியில் தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து சட்டை பையில் இருந்த பணத்தை வழிப்பறி செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட பனிக்கத்தெருவை சேர்ந்த வேல் முருகன் (எ) முருகன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிரி மீது உறையூர் காவல் நிலையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை செய்ததாக 13 வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் இருப்பது தெரிய வந்தது. எனவே எதிரி வேல் முருகன் (எ) முருகன் என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு உறையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க ஆணையிட்டார்கள்.
