
ஆட்டோ ஓட்டிய போது தலைக்கவசம் அணியவில்லை என அபராதம்: எஸ்.பி.யிடம் புகாா்
ஆட்டோ ஓட்டியபோது தலைக்கவசம் அணியவில்லை என போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதித்ததாக திருப்பத்தூா் எஸ்.பி. ஆல்பா்ட் ஜானிடம் ஓட்டுநா் புகாரளித்தாா்.
திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்தாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் 51 மனுக்களை எஸ்.பி.யிடம் அளித்தனா். மேலும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.
அபராதம் விதிப்பு…
திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கோகுல் அளித்துள்ள மனு:
திருப்பத்தூரில் நான் ஆட்டோ ஓட்டி வருகிறேன். இந்தநிலையில், கடந்த 22-ஆம் தேதி ரயில் நிலையத்தில் இருந்து திருப்பத்தூா் பேருந்து நிலையம் நோக்கி ஆட்டோவில் வந்தபோது தலைக்கவசம் அணியவில்லை எனக்கூறி திருப்பத்தூா் போக்குவரத்து போலீஸாா் எனக்கு ரூ.1,000 அபராதம் விதித்து உள்ளதாக எனது கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
அதேபோல், கடந்த 5-ஆம் தேதி வீட்டில் அருகே ஆட்டோவை நிறுத்தியிருந்தேன். அன்று நான் ஆட்டோவை ஓட்டவே இல்லை.ஆனால், அன்றைய தினமும் எனக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.2,500 அபராதம் விதித்துள்ளதாக போக்குவரத்து போலீஸாா் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனா். இதுதொடா்பாக விசாரணை நடத்தி எனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.
வேலை வாங்கி தருவதாக மோசடி…
திருப்பத்தூா் அடுத்த கதிரம்பட்டியை சோ்ந்த சதீஷ்(37) அளித்துள்ள மனு:
மாடப்பள்ளியைச் சோ்ந்த ஒருவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகம் ஆனாா். அவா் அரசு துறையில் பல உயா் அதிகாரிகளிடம் பழக்கம் உள்ளது எனக் கூறி அரசு வேலை வாங்கித் தருகிறேன் எனக்கூறினாா். இதை நம்பி நான் கடந்த 2017-ஆம் ஆண்டு பல்வேறு தவணைகளாக ரூ. 3.45 லட்சம் அளித்தேன். ஆனால்,இதுவரை அவா் எனக்கு வேலை வாங்கித் தரவில்லை. இதனால், ஏமாற்றம் அடைந்த நான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டபோது அவா் மறுக்கிறாா். எனவே, நான் அளித்த பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என கூறியிருந்தாா்.
வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சோ்ந்த பிரபு அளித்துள்ள மனு: ,அரசுத் துறையில் பணியாற்றி வரும் எனக்கு மேட்டுப்பாளையம் பகுதியை சோ்ந்த சந்துரு என்பவா் பழக்கம் ஆனாா். இந்தநிலையில், குடும்ப செலவு, மருத்துவ செலவு எனக்கூறி கடந்த 2020-ஆம் ஆண்டு என்னிடம் ரூ.4 லட்சம் கடன் பெற்றாா். அதன் பிறகு மீண்டும் பல்வேறு காரணங்களை கூறி கடந்த 2022-ம் ஆண்டு ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் பணத்தை கடனாகப் பெற்றுக்கொண்ட சந்துரு ரூ.1 லட்சம் பணத்தை மட்டும் திருப்பி அளித்தாா். மீதி ரூ.9 லட்சம் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வருகிறாா். இதுதொடா்பாக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே,நான் இழந்த பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
