குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதே முக்கியம்’’ – காவலர் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதல்வர் அறிவுறுத்தல்
காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்வதுடன், குற்றங்களே நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று புதிதாக பணியில் சேர்ந்துள்ள 2-ம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
தமிழகம் முழுவதும் இருந்து காவல்துறை, தீயணைப்பு மற்றும் சிறைத்துறைக்கு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3,359 இரண்டாம் நிலை காவலர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 20 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மீதமுள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளும், அந்தந்த மாவட்டங்களில் காவல் உயர் அதிகாரிகளும் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “பணி நியமன ஆணை பெறும் சீருடை பணியாளர்களுக்கு நேர்மையாகவும் திறமையாகவும் செயல்பட எனது வாழ்த்துக்கள். திமுக ஆட்சியில் தான் முதன் முதலில் காவல் ஆணையம் அமைத்ததுடன், அதிக எண்ணிக்கையில் காவல் ஆணையங்கள் அமைத்து பல்வேறு முன்னோடி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 17 ஆயிரம் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிதான் காவல்துறையின் பொற்காலமாக அமைந்துள்ளது.
காவல்துறை பணியில் சேர்ந்தவர்கள் கடும் உழைப்பால் இங்கு வந்துள்ளீர்கள். உங்களுக்கு ஏராளமான கடமைகள் உள்ளன. குற்றங்களை குறைப்பது என்பதை விட குற்றங்களே நடைபெறாமல் பார்ப்பது தான் சாதனை. தற்போதைய சூழலில் உங்கள் முன் சைபர் குற்றங்கள், போதைப்பொருள் ஒழிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பது போன்றவை உள்ளன.
உங்களை நாடி வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி அவர்கள் குறைகளை கேட்க வேண்டும். சமூகநீதிப் பார்வையும், மதச்சார்பின்மையும் நிச்சயம் உங்களுக்கு முக்கியம். சாதிய பாகுபாடு பார்க்கக்கூடாது. மாநிலம் அமைதியாக இருந்தால்தான் புதிய தொழிற்சாலைகள் வரும். குற்றங்களே இல்லை என்பதுதான் உங்களின் சாதனையாக இருக்க வேண்டும். குறிப்பாக குற்றங்களை முழுமையயாக குறைப்பதே உங்களது டிராக் ரெக்கார்டாக இருக்க வேண்டும். தற்போது என்னிடம் பணி நியமன ஆணை வாங்கும் காவலர்கள், எதிர்காலத்தில் என்னிடம் விருது பெற வேண்டும்.
அதிகாரிகளை ஒன்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கீழ் பணியாற்றும் காவலர்களுக்கு உங்கள் மீது மரியாதை இருக்க வேண்டும். பயம் இருக்கக்கூடாது. அனைவரையும் அரவணைத்து நடத்துங்கள். குற்றவாளிகளை கண்டுபிடித்து விட்டோம் என்று கூறுவது சாதனை இல்லை. குற்றங்கள் நடைபெறாமல் தடுத்துவிட்டோம் என்று கூறுவதுதான் நம்முடைய சாதனையாக இருக்க வேண்டும். காக்கிச் சட்டையை அணியும் இந்த நாளில் இருந்து அதற்கான உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பணியாற்றும் பகுதிகளில் குற்றங்கள் முழுமையாக தடுக்கப்பட்டது என்பதுதான் உங்களுடைய ட்ராக் ரெக்கார்டாக இருக்க வேண்டும்.
வேலைக்குச் சேர்ந்த புதிதில்தான் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால், காலப்போக்கில் சோர்ந்துவிடுவார்கள் என்று பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இன்று பணியில் சேரும்போது உங்களிடம் இருக்கும் மிடுக்கும், போலீஸ் என்ற கம்பீரமும், ஓய்வுபெறும் வரை இருக்க வேண்டும். உங்களது பெயரைச் சொன்னாலே தமிழகம் பெருமைப்பட வேண்டும். பணியோடு சேர்த்து உங்களுடைய உடல்நலனிலும் கவனம் கொள்ளுங்கள். குடும்பத்தோடு நேரம் செலவிடுங்கள். நவீன காலத்துக்கு ஏற்ற வகையில், தொழில்நுட்ப ரீதியாகவும் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தலைமைச்செயலர் நா.முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.