போனை ஏன் எடுக்கல; வினையான விளையாட்டு!' வீடியோ காலின்போது புதுவை வழக்கறிஞருக்கு நேர்ந்த சோகம்புதுச்சேரியில் வீடியோ காலில், தனக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணை மிரட்டுவதற்காக விளையாட்டாக தூக்குக் கயிற்றை மாட்டிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரி, கனகசெட்டிக்குளம் புதுநகரைச் சேர்ந்த கோதண்டத்தின் மகன் சுரேஷ் (28). இவர் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும், கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் வரும் 27-ம் தேதி திருமணம் செய்வதாக நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. நிச்சயம் செய்யப்பட்ட நாளில் இருந்து தினமும் இருவரும் செல்போனில் பேசி வந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக அந்தப் பெண், சுரேஷிடம் பேசவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் மனவருத்தத்தில் இருந்த சுரேஷ் நேற்று அந்தப் பெண்ணுக்கு தொடர்ச்சியாக போன் செய்திருக்கிறார்.நீண்ட நேரத்திற்குப்பின் அவர் போனை எடுத்ததும், தொடர்பை துண்டித்த சுரேஷ், உடனே வீடியோ கால் செய்திருக்கிறார். அவர் போனை எடுத்ததும் அதை ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு, தனது அறையில் இருந்த மின்விசிறியில் கயிற்றைக் கட்டியிருக்கிறார். தொடர்ந்து நாற்காலி மீது ஏறி கயிற்றின் மறுமுனையை தனது கழுத்தில் மாட்டிக் கொண்ட அவர்,
என்னிடம் போனில் பேசவில்லை என்றால் நான் தூக்கில் தொங்கிவிடுவேன்’ என்று அந்தப் பெண்ணை விளையாட்டாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், `ஏன் இப்படி செய்றீங்க. உடனே கீழே இறங்குங்க’ என்று கூச்சலிட்டிருக்கிறார். அதன்படி, சுரேஷ் கீழே இறங்க முயன்றபோது நாற்காலி இடறி விழுந்ததால் கயிறு அவரது கழுத்தை இறுக்கியிருக்கிறது. இதையடுத்து, உடனே சுரேஷின் பெற்றோருக்குப் போன் செய்து அந்தப் பெண் தகவலைத் தெரிவித்திருக்கிறார். அவர்கள் அறையைத் திறக்க முயன்றபோது, கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றிருக்கிறார்கள்.ஆனால், அதற்குள் கழுத்து இறுகிய நிலையில் சுரேஷ் சடலமாகத் தொங்கியிருக்கிறார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சுரேஷின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கதிர்காமல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்