தம்பி, ஏடிஎம் கார்டைக் கொடுங்க; நான் பணம் எடுத்துத்தர்றேன்’- வாலிபரைப் பதறவைத்த டிப் டாப் முதியவர்பாலமுருகன் அவரது மாமனாரிடம், 'இது உங்களுடைய கார்டுதானே... ஆனா இதுல வேற ஒருத்தரோட பெயர் இருக்குதே... எப்படி?' என்று கேட்டிருக்கிறார். ``தம்பி, உங்களுக்கு பணம் எடுக்கத் தெரியலையா... இங்க கொடுங்க. நான் எடுத்துத்தர்றேன்" என்று ஏடிஎம் கார்டை வாங்கி நூதன முறையில் ஒரு ஆட்டோ டிரைவரை ஏமாற்றியிருக்கிறார், ஒரு டிப்-டாப் முதியவர். முதியவர் இப்படியெல்லாம் யோசிப்பாரா என்று அதிர்ச்சியடைகிறார்கள் பெரம்பலூர் போலீஸார்.பெரம்பலூர் அருகே உள்ள புதுநடுவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர், பாலகிருஷ்ணன். இவர், வேப்பந்தட்டை தாலுகா கிருஷ்ணாபுரம் மின்வாரிய அலுவலகத்தில் ஃபோர்மேனாக வேலை செய்து வருகிறார். பாலகிருஷ்ணன், தனது மருமகனும் ஆட்டோ டிரைவருமான பாலமுருகனிடம் ஏடிஎம் கார்டைக் கொடுத்து, பொங்கல் செலவுக்குப் பணம் எடுத்துவருமாறு சொல்லி அனுப்பியிருக்கிறார். இதனால், பாலமுருகன் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றிருக்கிறார்.அப்போது, அவருக்குப் பின்னால் டிப்- டாப்பாக பேன்ட்- சட்டை போட்டிருந்த ஒருவர் நின்றிருக்கிறார். அப்போது, ஏடிஎம்-மில் பணம் எடுக்கத் தெரியாமல் நின்றிருக்கிறார் பாலமுருகன். இந்த நிலையில், பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து பாலமுருகனிடம்,
தம்பி உங்களுக்கு பணம் எடுக்கத் தெரியலையா… இங்க கொடுங்க’, என்று ஏடிஎம் கார்டை வாங்கி இயந்திரத்தில் போட்டிருக்கிறார்.அப்போது, ‘தம்பி உங்களுடைய ஏடிஎம் பின் நம்பரைச் சொல்லுங்க’ என்று கேட்டிருக்கிறார். முதலில் பணம் வரவில்லை. அதன்பிறகு பாலமுருகனின் கவனத்தை திசைதிருப்பிவிட்டு, ‘தம்பி, பணம் வரவில்லை’ என்று சொல்லி அவரிடம் வேறு ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, பாலமுருகன் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே கல்யாண் நகர்ப் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்குச் சென்று பணம் எடுக்க முயன்றபோது ஏடிஎம் கார்டின் பின் நம்பர் தவறு என்று வந்திருக்கிறது.அதை, பாலமுருகன் அவரது மாமனாரிடம், ‘இது உங்க கார்டு தானே… ஆனா, இதுல வேற ஒருத்தரோட பெயர் இருக்குதே! இது எப்படி என்று கேட்டிருக்கிறார். கொஞ்ச நேரத்தில், ஏடிஎம் கார்டு மூலம் டிப்- டாப் ஆசாமி ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.30 ஆயிரம் எடுத்துள்ளார். இது, மாமனார் பாலகிருஷ்ணனின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வந்திருக்கிறது. பதறிப்போனவர், என்ன நடந்தது என்று பாலமுருகனிடம் கேட்டிருக்கிறார். அவர் நடந்தவற்றைச் சொல்ல, ‘நாம ஏம்மாந்துட்டோம்’ என்று அதிர்ச்சியடைந்துள்ளார்.பின்னர், அந்த ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வங்கி அதிகாரிகள் பார்த்தபோது, டிப்-டாப் மனிதர் ஒருவர் பாலகிருஷ்ணனின் ஏடிஎம் கார்டு மூலம் ரூ.30 ஆயிரம் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, கேமராவில் பதிவான காட்சிகளுடன் இது தொடர்பாகப் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் பாலகிருஷ்ணன். அதன்பேரில், போலீஸாரும் விசாரணை நடத்திவருகிறார்கள். ஏடிஎம்-மில் பணம் எடுத்துத் தருவதுபோல் புதிய கார்டை மாற்றிக்கொடுத்து நூதன முறையில் மோசடிசெய்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்