`லாக்கரிலிருந்து எடுக்கப்பட்ட 400 சவரன் நகைகள்!’- பா.ஜ.க பிரமுகருக்கு அதிர்ச்சிகொடுத்த கொள்ளைதிருவள்ளூர் மாவட்டத்தில் பா.ஜ.க பிரமுகர் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள், பூட்டை உடைத்து 400 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் பங்களா வீட்டில் குடியிருந்து வருபவர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன். இவர் பா.ஜ.க-வில் தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். ஜானகிராமனின் தம்பி மகள் திருமணம் வரும் 20-ம் தேதி சென்னையில் நடக்கிறது.இதில் பங்கேற்க ஜானகிராமனின் மகன், மருமகள் மற்றும் உறவினர்கள் அமெரிக்காவிலிருந்து வந்துள்ளனர். திருமணத்தையொட்டி டிரஸ் எடுக்க ஜானகிராமன் மற்றும் அவரின் குடும்பத்தினர் வீட்டிலிருந்து சென்னைக்குச் சென்றனர். இரவு நேரமானதால் சென்னையில் உள்ள தம்பி வீட்டில் ஜானகிராமனின் குடும்பத்தினர் தங்கினர்.இன்று காலை ஜானகிராமன் குடும்பத்தினரோடு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 5 பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்த சுமார் 400 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதனால் ஜானகிராமன், மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வடுதல் டி.எஸ்.பி பவன்குமார் மற்றும் மீஞ்சூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
கொள்ளைபோன நகைகள், பணம் குறித்து ஜானகிராமனிடம் போலீஸார் விசாரித்தனர். போலீஸ் விசாரணையில், திருமணத்துக்காக லாக்கரிலிருந்த நகைகளை ஜானகிராமனின் குடும்பத்தினர் வீட்டுக்கு எடுத்துவந்து வைத்திருந்தபோது இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. ஜானகிராமனின் வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. திருமண வேலையாக ஜானகிராமனின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டுச் செல்வதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிலிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கொள்ளை நடந்த வீட்டில் எப்போதும் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருப்பார்கள். சம்பவத்தன்று ஜானகிராமன் குடும்பத்தினர் வீட்டில் யாருமில்லை என்பதால் பணியாளர்களும் அங்கு இல்லை. மேலும், சாலை விரிவாக்கப் பணிக்காக ஜானகிராமனின் வீட்டின் சுவர் சில தினங்களுக்கு முன் இடிக்கப்பட்டுள்ளது. அதனால் எளிதாகக் கொள்ளையர்கள் வீட்டுக்குள் சென்றுள்ளனர். சில பூட்டுகளை கடப்பாரையால் உடைத்தும் இன்னும் சில பூட்டுகளை கள்ளச்சாவி போட்டு திறந்தும் கொள்ளையடித்துள்ளனர். கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரித்துவருகிறோம்” என்றனர்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்