பூந்தமல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் இறந்து விட்டதாக
சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய இருவர் கைது
பூந்தமல்லி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 40 நபர்களில் 12 நபர்கள் இறந்து விட்டதாகவும். இந்நோய் பூந்தமல்லி பகுதியில் வேகமாக பரவி வருவதாகவும், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறிவருகின்றனர் என வாட்ஸப்பில் சில சமூக விரோதிகள் பரப்பிய தகவல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வைரலானது. இது குறித்து பூந்தமல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலைய Deputy Director திரு.பிரபாகரன் அவர்கள் T-12 பூந்தமல்லி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
T-12 பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.பெஞ்சமின், வ/33, த/பெ.மூர்த்தி ஜேக்கப், எண்.2/40, ஜேம்ஸ் தெரு, வடக்கு மலையம்பாக்கம், மாங்காடு 2.சிவகுமார், வ/37, த/பெ.செல்வராஜ், எண்.51, KGT நகர், காட்டுப்பாக்கம் ஆகிய இருவரை நேற்று (20.03.2020) கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட பெஞ்சமின் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருவதும், சிவகுமார் தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் சிவகுமார் தான் பணிபுரியும் கார் நிறுவனத்திற்கு விடுமுறை விடவேண்டும் என்பதற்காக போலியான செய்தியை சமூக வலைத்தளத்தில் பரப்பியதை ஒப்புக்கொண்டார்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.